குஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்..

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி.

கூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்விடுக்கும் போட்டோக்கள்தான் இப்போது பாஜக சோஷியல் மீடியா பிரிவினரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

4 மாதங்கள் முன்புவரை குஜராத் தேர்தலை எளிதாக ஊதித்தள்ளிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தது, பாஜக. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

நிலவரமோ கலவரம்

ஜிஎஸ்டிக்கு எதிராகவும், பண மதிப்பிழப்புக்கு எதிராகவும் குஜராத்தின் வணிக சமூகம் பொங்கி எழுந்துள்ளது. கையில் பணப் புழக்கம் இல்லை என்று அவர்கள், கொந்தளித்தபடி உள்ளனர். களத்தில் நிலவரம் சூடாவதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கை ஓங்குவதாக கூறி வருகின்றன. இப்போதைக்கு தாமரைக்கு கீழேதான் கை இருக்கிறது என்றாலும், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என கணிக்கிறது தாமரை தலைமை.

பிரச்சார யுக்தி மாற்றம்

இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டுதான் பிரசார ஸ்டைலை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ல் தாமதமாக தொடங்குவதற்கு காரணமே, பிரதமர் முழுக்க குஜராத் மீது கவனம் செலுத்தும் நிலை வந்துள்ளது என்பதன் அறிகுறிதான்.

கும்பிடு போடும் மோடி

இதுவரை ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவை மக்களுக்கு கிடைத்த வரம் என கூறி வந்த பாஜக இப்போது, ராகத்தை மாற்ற பாட ஆரம்பித்துள்ளது. கைகளை கூப்பியபடி மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதை போன்ற போட்டோக்களை வைரலாக்கிவருகிறது பாஜக.

கஷ்டத்தை பொறுங்கள்

மோடியின் கைகூப்பிய படத்திற்கு கீழே, குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: நமது வீடு புனரமைக்கப்படும்போது நமக்கு இடையூறு ஏற்படாதா? தற்போது, நமது நாடு முழுவதும் புனரமைக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்துக்கொள்ளுங்கள், மற்றும் பாஜகவுக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை கையை தூக்கி ஆக்ரோஷமாக வாக்குறுதிகளை அறிவித்த மோடி, இப்போது கஷ்டத்தை பொறுத்துக்கொள்ளுங்கள் என கைகூப்பியபடி உள்ளது கள நிலவரம் கண்கூடாக தெரிவதால்தான்.

ஒப்புக்கொண்ட பாஜக

கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளுமாறு பாஜக வெளிப்படையாக கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இந்த அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது என சுட்டிக் காட்டியது உண்மைதான் என்பதை காலம் கடந்து பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்றே இந்த மாற்றம், பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: