காந்திநகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நடத்தி வரும் பிரசார கூட்டங்களில் தொண்டர்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளன. குஜராத்தில் டிசம்பரில் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் தனது சொந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரே இதனால்தான் தாமதமாக தொடங்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அளவுக்கு இதை கவுரவ பிரச்சினையாக மோடி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் குறைவு
குஜராத்தின் பல்வேறு இடங்களில் மோடி நேற்று முதல் சூறாவளி பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ளார். பூஜ், ஜஸ்தான், தாரி, கடோதரா ஆகிய பகுதிகளில் நேற்று மோடி பிரசாரம் செய்தார். ஆனால் இந்த கூட்டங்களில் மக்கள் குறைந்த அளவே பங்கேற்றதாக கூறப்படுகிறது. காலி சேர்கள் போட்டோக்களை காங்கிரஸ் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறது.
உளவுத்துறை ஆய்வு
இதுகுறித்து மாநில உளவுத்துறையும் ஆய்வு செய்துள்ளது. 10000 பேரை எதிர்பார்த்தால் 7000 பேர்தான் வந்துள்ளனர். எனவே இந்த விமர்சனத்தில் உண்மை உள்ளது என்று மேலிடத்திற்கு தகவல் போயுள்ளதாம். இதனால் அதிருப்தியிலுள்ள குஜராத் பாஜகவினர், பிரசார கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தெரு தெருவாக ஆட்டோக்களில் மோடி பிரசாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து பிரசாரம் நடக்கிறது.
விளம்பரம் அதிகரிப்பு
குஜராத்திலுள்ள பல ரேடியோ ஸ்டேஷன்களில் இன்று திரும்ப திரும்ப மோடி கூட்டங்கள் குறித்த விளம்பரங்கள்தான் அதிகப்படியாக ஒலிபரப்பாகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றை கூறி வாக்கு சேகரித்த பாஜகவின், இப்போது, ‘குஜராத் மண்ணின் மகன் மோடி’ உங்களிடம் வாக்கு கேட்கிறார் என கூறி பிரசார போக்கை மாற்றியுள்ளனர்.
கோஷத்தை மாற்றிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியும், மண்ணின் மகன் என்ற கோஷத்தை நேற்றைய தேர்தல் பிரசாரத்தில் முன்னெடுத்தார். காங்கிரஸ் மீது கடும் கோபத்தை கொட்டி பிரசாரம் நடத்தினார். பிரசார யுக்தியை மோடி மாற்ற காரணம், மக்கள் கூட்டம் குறைத் தொடங்கியதுதான் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ஜிஎஸ்டி அமலாக்கத்தால் குஜராத்திலுள்ள வணிக சமூகம் பணப் புழக்கம் இல்லாமல் மத்திய அரசு மீது கோபத்தில் இருப்பதால் பிரசார கூட்டங்கள் பிசிறடிப்பதாக கூறப்படுகிறது.