தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ஆறுமாதங்களுக்குள் மூட உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று தொடங்கி (நவம்பர் 29,2017)ஆறு மாதங்களுக்குள் மூடிவிடவேண்டும் என்றும் புதிதாக எந்த மணல் குவாரிகள் அல்லது சுரங்கங்களை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் தகுந்த ஆவணங்களைப் பெற்று, ஜிஎஸ்டி வரியைச் செலுத்தி மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தபின்னர், அதனை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதிசெய்து மணலை விற்க தனியார் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி ஆர்.மகாதேவன் மணல் கடத்தலைத் தடுக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக மாநிலத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடவேண்டும் என்றும் வெளிநாட்டில் இருந்து அனுமதியுடன் இறக்குமதி செய்யப்படும் தடைசெய்யப்படாத மணலை விற்பனை செய்ய தடை விதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

தமிழக மக்களின் நலன் கருதியும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டும் 19 வழிகாட்டல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க தமிழக அரசு புவியியல் துறையில் உள்ள நிபுணர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கவேண்டும் என்றும், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், கணிமங்களை வியாபாரத்திற்காக எடுத்துச்செல்வதை எவ்வாறு சோதனை செய்யவேண்டும் என்பதை அவர்களுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விளக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் சட்டத்திற்குப் புறம்பாக கணிமங்களை பதுக்கிவைத்தல் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கையாக கணிமங்களை ஏற்றிவரும் வண்டியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்துசெய்யவேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக கணிம வளங்களை சுரண்டியவர்கள் மற்றும் அவர்களுக்கு துணைபோனவர்கள், அதிலும் குறிப்பாக அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். -BBC_Tamil

TAGS: