இஸ்லாமாபாத்,
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை பாகிஸ்தானில் மூளையாக இருந்து வழிநடத்தியவன் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். அந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தற்போது ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பினை நடத்தி வருகிற ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்துள்ளது.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இவனை தீர்மானம் எண்.1267-ன்படி சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை 2008-ம் ஆண்டு, நவம்பர் 28-ந் தேதி எடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அமெரிக்க வெளியுறவுத்துறையும் உத்தரவு எண். 13 ஆயிரத்து 224-ன்படி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அரசு அமைந்ததும் தொடர் நிர்ப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். ஆனால் 297 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டான். இது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
ஹபீஸ் சயீத்தை உடனடியாக மீண்டும் கைது செய்யாவிட்டால், அது பாகிஸ்தானுடனான உறவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று அமெரிக்கா வெளிப்படையாக எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் அவனது விடுதலையை பாகிஸ்தான் அரசு நியாயப்படுத்தியது.
இந்த நிலையில், “நான் பயங்கரவாதி அல்ல, என் பெயரை தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஐ.நா. சபையில் ஹபீஸ் சயீத் திடீர் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளான். அமெரிக்கா நேரடியாக எச்சரிக்கை விடுத்த நிலையில் அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
-dailythanthi.com