எச்.ஐ.வி தொற்றுவது குறைகிறது, சமூகப் புறக்கணிப்பு குறைந்துள்ளதா?

இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் 2016-2017ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 0.30% ஆண்களும், 0.22% பெண்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.17 லட்சம் பேர் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆந்திரா, தெலங்கானா, மாகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகம், மணிப்பூர், நாகலாந்து, மிசோராம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியை (0.26%) விட அதிக அளவில் எச்.ஐ.வியால் பாதிக்கபட்டவர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2௦௦௦-ஆவது ஆண்டில் இருந்த அளவைவிட 66 சதவிகிதமும், 2௦௦7இல் இருந்ததைவிட 32 சதவிகிதமும் புதிய நோய்த் தொற்றுகள் உண்டாவது 2015இல் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நோய்த் தொற்றின் விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. ஆனால், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கபட்டவர்கள் உள்ளாகும் இன்னல்கள் அதே அளவுக்கு குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

‘பொது வழியில் நடக்கக் கூட அனுமதிக்கவில்லை’

தொழிற்பயிற்சி முடித்துவிட்டு தமிழ்நாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வந்த ராதாகிருஷ்ணனுக்கு, 1995இல் துபாயில் வேலை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. துபாய் கிளம்பும் முன்பு ஒரு சம்பரதாயமாக மட்டுமே அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை அவர் வாழ்வையே மாற்றப்போகும் என்று அப்போது அவர் நினைக்கவில்லை.

ராதாகிருஷ்ணனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. துபாய் செல்லாமல் சென்னையிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் அடுத்த பத்து ஆண்டுகள் வேலை செய்த அவர், தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, 2004 முதல் ‘காஞ்சிபுரம் நெட்வர்க் ஆப் பாசிடிவ் பீப்பிள்’ எனும் அமைப்பை நடத்தி வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக சுற்றி இருப்பவர்களுக்குத் தெரிந்த பின்னர் தாம் சந்தித்த பிரச்னைகளை விவரித்தார். “என் வீட்டருகே பொது தண்ணீர் குழாய் பதிக்க உள்ளாட்சி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது. என் வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்கான பொது வழியும் சுற்றி இருந்தவர்களால் அடைக்கப்பட்டது,” என்கிறார் அவர்.

அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு, அவர்கள் நேரடியாக இங்கு வந்த பின்னரே அந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்கிறார் அவர். “ஒரு முறை என் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டு, அது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான சமூகப் புறகணிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஆகிய காரணங்களால்தான் பாதிக்கப்பட்ட யாரும் வெளியில் சொல்ல முன் வருவதில்லை,” என்றார் ராதாகிருஷ்ணன்.

எச்.ஐ.வி தொற்று இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அதைச் செய்ய சில மருத்துவர்களிடமே பேசிப் புரியவைக்கும் சூழல்தான் இன்னும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

‘வேலை கிடைத்துவிட்டது. ஆனால்…’

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்.சி.பி.ஐ பிளஸ் என்று பரவலாக அறியப்படும் இந்தியாவில் எச்.ஜிவி. தொற்றுடன் வாழும் மக்களின் தேசிய கூட்டமைப்பின் முழு நேர ஊழியராக இருப்பவர் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சின்மய் மோதி.

இளைஞர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இடையே எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இந்த 25 வயது இளைஞர் பிறப்பிலேயே எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்.

வதோதராவில் தனது எம்.எஸ்.டபுள்யூ முதுநிலைப் பட்டத்தை முடித்த அவர் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பாதிகபட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது ஆகியவற்றையே தனது முழு நேர வேலையாகச் செய்து வருகிறார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். எனக்கு இதை மறைப்பதில் உடன்பாடில்லை,” என்றும் “நான் இதே துறையை தேர்வு செய்ததால் எனக்கு எளிதாக வேலை கிடைத்தது. ஆனால், நன்கு படித்துவிட்டு எச்.ஐ.வி தொற்று இருப்பதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், அல்லது இதை மறைத்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுபவர்களும் இருகின்றனர்,” என்றும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

உடல் நலம் சார்ந்த காரணங்களால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்று கவலை தெரிவித்த அவர், முன்பைவிட எச்.ஐ.வி உடையவர்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை விழிப்புணர்வு பிரசாரங்களால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடரும் சோகம்

முதல் கணவரை இழந்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம் செய்துகொண்ட கஸ்தூரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மணம் முடித்த சில மாதங்களிலேயே பேரிடியாய் வந்து சேர்ந்தது அந்த செய்தி.

படிப்பறிவில்லாத அவருக்கு திருமணம் ஆன ஆண்டைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. தான் 11 ஆண்டுகளாகவும் தனது கணவர் எட்டு ஆண்டுகளாகவும் எச்.ஐ.வி தொற்றுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார்.

தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் 20,௦௦௦ ரூபாய் தொழிற்கடன் பெற்ற அவர் சுழலும் நாற்காலிகளை சரி செய்யும் தொழிலைச் செய்து வருகிறார்.

கோவை மாநகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில் வசிக்கும் அவரது அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு, கஸ்தூரி மற்றும் அவரது கணவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாது.

சுயதொழில் மூலம் தன் வாழ்வை அமைத்துக்கொண்டாலும், அக்கம் பக்கத்தினர் தங்களைப் பற்றிய விவரம் தெரிந்தால் தாங்கள் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் அவரை விட்டு விலகவில்லை.

‘நாங்கள் இருவருமே கூலி வேலை செய்பவர்கள். சொந்தமாக இருக்க ஒரு இடம் வேண்டி பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். அது கிடைத்தால் இது மாதிரியான பயங்களுடன் வாழ வேண்டியதில்லை,’ என்றார் பிபிசி தமிழிடம் பேசிய கஸ்தூரி.

‘ஒரு சிலருக்கு எப்படியாவது முயன்று தொழிற்கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். ஆனால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு வங்கிகளில் கேட்கப்படும் ஆவணங்களால் சுயதொழில் தொடங்குவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை,’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவையைச் சேர்ந்த செயல்பாட்டாளர் சோமேஷ். -BBC_Tamil

 

TAGS: