தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர் 29 ம் தேதி புரட்டிப்போட்ட ஒக்கி புயலின் தாக்கத்தில் எட்டு மீனவர்கள் இறந்துபோனதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், பல குடும்பங்கள் காணாமல் போன மீனவர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காமல் சோகத்தில் மூழ்கியுள்ளன.
சில மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெகு சிலர் உயிர்பிழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர் மழை, புயல் சீற்றம் காரணமாக ஐந்து நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் இருளிலும், கடலுக்கு போனவர்கள் வீடு திரும்பாததால் மீனவ குடும்பங்கள் விரக்தியிலும் இருந்ததை பார்க்க முடிந்தது.
கண்ணீர் கடலில் மீனவ குடும்பங்கள்
ஓக்கி புயலில் சிக்கி, ஆறு மணிநேரம் கடுமையான போராட்டத்திற்கு பிறகு, கப்பலில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஜஸ்டின் பாபு(39) இறந்துபோனதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
”நானும் மருமகனும் மிகவும் சிரமப்பட்டுத்தான் கரையை நெருங்கினோம். வெறும் 16 கடல் மைல் தூரத்தில் கப்பலில் இருந்து தவறி ஜஸ்டின் பாபு விழுந்துவிட்டார். கப்பலில் இருந்த நாங்கள் 14 பேரும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம். புயலின் சீற்றத்தில் எங்களால் எதையும் பொருட்படுத்த முடியவில்லை,” என்று கண்ணீருடன் கூறினார் மரிய ஜேம்ஸ்.
புயல் சீற்றம் தொடங்கிய சில நிமிடங்களில் வயர்லஸ் மூலம் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும், மீட்க யாரும் வராததால் ஆறு மணிநேரம் கடலில் தத்தளித்துக் கரையேறியதாகவும் படகைச் செலுத்திய ஓட்டுநர் சுரேஷ் கூறினார்.
மரிய ஜேம்ஸின் மகள் சகாய நந்தினி 29) கணவர் ஜஸ்டின் பாபு மீண்டுவந்துவிடவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார். ”ஹெலிகாப்டர்ல போய் அவர கூட்டிட்டுவாங்க..அரசாங்கத்தில் காப்பாத்த மாட்டாங்களா?, புயல் வருமுன் சொல்லியிருந்தா அனுப்பியிருக்க மாட்டேனே. ஏன் சொல்லல..” என்று கதறி அழுதார்.
ஜஸ்டின் பாபுவின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மீனவக் குடும்பத்திலும் அழுகுரல் கேட்டது.
இறந்ததாகக் கூறப்படும் மீனவர் டேவிட்சனுக்கு (36) இரண்டு மகன்கள். டேவிட்சன் மனைவி நிஷா (34) கடற்கரை மண்ணில் பிறந்திருந்தாலும், இதுவரை எந்தவேலையிலும் ஈடுபட்டது இல்லை என்கிறார்கள் உறவினர்கள். டேவிட்சன் மரணத்தால் நிஷா தன்னம்பிக்கையை இழந்துள்ளார் என்றும் நம்மிடம் பேசிய நிஷாவின் உறவினர்கள் கூறினர்.
புயலில் 18 மணி நேரம் போராடிய உயிர்
ஒக்கி புயல் நிஷாவின் கணவர், அவரது இரண்டு சகோதரர்கள் என அவரது குடும்பத்தில் இருந்த மூன்று ஆண்களின் உயிரையும் எடுத்துச்சென்றுவிட்டது என்கிறார் உறவினர் செர்பா.
”டேவிட்சன், அவரோட நண்பர்கள் மூன்று பேரும் ஒரு வள்ளத்த பிடிச்சிட்டு காலையில இருந்து அடுத்த நாள் காலையில வரைக்கும் போராடினார்கள். டேவிட்சன் 18 மணிநேரம் அங்கேயே இருந்திருக்கு. அலை அடிச்சு, வள்ளம் நெத்தியில பட்டுபட்டு, டேவிட்சன் நெத்தி பிளந்து, ரத்தம் கொட்டியிருக்கு. அவனாலேயே முடியாம, இனிமேல் நான் இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு கையைவிட்டு டேவிட்சன் இறந்து போயிருக்கு. அடுத்த ஒரு மணி நேரத்தில கேரளாவில இருந்த வந்த நேவி கப்பல் மீதம் இருந்த மூனு பேர காப்பாத்தியிருக்கு. அதுவும் கேரள அதிகாரிகள்தான் காப்பாத்தியிருக்காங்க. நாங்க மீனவ மக்கள் தமிழ்நாட்டிலதானே இருக்கோம்,” என்று கோபத்துடன் பேசினார் மீனவ பெண் செர்பா.
குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ் கடலில் குறைந்தபட்சம் 15 நாட்கள் தங்கி மீன்பிடிப்பார்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து ஒக்கி புயலால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து முன்பே சொல்லியிருந்தால், பலரும் கடலுக்கு போகாமல் இருந்திருப்பார்கள், பல பெண்களும் விதவையாகியிருக்க மாட்டார்கள், பல குழந்தைகள் தந்தை இல்லாமல் வளரவேண்டிய கட்டாயத்தில் இருக்கமாட்டார்கள் என்றும் செர்பா(36) கூறினார்.
குறைந்தபட்சம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பிறகாவது ஹெலிகாப்டர் அல்லது வேகப்படகு கொண்டு ஆழ்கடலுக்குச் சென்றவர்களை மீட்டிருக்கவேண்டும் என்கிறார் மீனவ பெண் சூசையம்மா அலெக்சாண்டர்(59).
”நாங்களும் இந்திய நாட்டு பிரஜைதானே. எங்க மக்கள் கடலில் தத்தளிக்கற நேரம், அரசாங்கம் என்ன செய்தது? உடனடியா மக்கள ஏன் மீட்கல,” என்று கேள்விகளை அடுக்கிறார் சூசையம்மா அலெக்சாண்டர்.
”ஒவ்வொரு ஆண்டும் 25 மீனவர்கள் மாயம்”
தமிழகத்தின் நான்கில் ஒரு பகுதி மீனவர்களைக் கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 25 மீனவர்கள் ஆழ்கடலில் மாயமாகிப்போகும் நிலை உள்ளது என்கிறார் அருட்தந்தை சர்ச்சில்.
”குளச்சலை மையமாகக் கொண்டு ஆபத்துக்காலங்களில் மீனவர்களை மீட்கத் தயார் நிலையில் மீட்பு குழுவோ, வேகக்கப்பலோ நிறுவவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். எந்த அரசும் செவி சாய்க்கவில்லை,” என்றார் சர்ச்சில்.
அமைச்சர் பதில்
சர்ச்சிலின் கருத்தை எதிரொலித்த நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விஜயகுமார், ஆபத்துக் காலங்களில் மீனவர்களை மீட்கும் ஒரு மீட்பு தளத்தை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
”மத்திய அரசு மீட்பு குழுவை அமைக்காமல் இருந்தால், எனது தொகுதி நிதியில் விரைவில் நான் வேககப்பல் ஒன்றை தயார் செய்து என் மாவட்ட மீனவர்களுக்கு உதவுவேன். நாங்கள் யாருக்காகவும் இனி காத்திருக்காமல் இருக்கலாம்,” என்று விஜயகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் தொய்வு இருந்ததா என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ”மத்திய அரசின் கீழ் கப்பற்படை செயல்படுகிறது. அதனால் தமிழகத்தில் அல்லது கேரளாவில் இருந்த அதிகாரிகள் காப்பாற்றியதில் எந்த தவறும் இல்லை. தமிழகத்தில் உள்ள அதிகாரிகளும் முழு மூச்சில்தான் செயல்படுகிறார்கள். தற்போதுவரை சுமார் 2,134 மீனவர்கள் பல்வேறு இடங்களில் கரைஒதுங்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. மீட்பு பணிகளை துரிதமாகவே செய்துவருகிறோம்,” என்றார்.
இறப்புச் சான்றிதழுக்கு ஏழு ஆண்டுகள்
இயற்கை சீற்றத்தில் காணாமல்போன மீனவர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை கிடைப்பது சாதாரணமானது அல்ல என்றும் இறப்பு சான்றிதழ் பெற மீனவ குடும்பத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டும் என்கிறார் நெய்தல் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெர்லின்.
”ஒரு மீனவர் காணாமல்போன ஏழு ஆண்டுகள் கழித்தே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். அதிலும் கூட இறந்த மீனவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடி இறப்புச் சான்றிதழ் தேவை என்று மனு செய்த பிறகே சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழைக் கொண்டே அரசின் இப்பீட்டுத்தொகையைப் பெறமுடியும். இதன் காரணமாகவே பல குடும்பங்களில் இறப்புச் சான்றிதழ் பெறுவதில்லை,” என்கிறார் பெர்லின்.
பெர்லினின் நண்பர் ஜெர்மன்ஸ் காணாமல் போய் 13 ஆண்டுகள் ஆகியும் கூட, அவரது குடும்பத்திற்கு எந்தஉதவியும் கிடைக்கவில்லை என்றும் இறப்பு சான்றிதழ் அளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மீனவ குடும்பங்கள் இறப்புச் சான்றிதழ் பெற ஏன் ஏழு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சரிடம் கேட்டபோது, ”காணாமல் போன ஒரு நபர் ஏழு ஆண்டுகள் கழித்தே இறந்துபோனதாக அறிவிக்கப்படும் என்பது எல்லோருக்கும் பொதுவான சட்டம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சுனாமி பாதிப்பில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் கொடுத்தார். அதுபோல செய்யமுடியும். அதற்கு நடவடிக்கை எடுப்போம்,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
ஆனால் மீனவ அமைப்புகள் நிலப்பகுதியில் ஒருவர் காணாமல் போனால், வேறு ஊரில் உயிரோடு இருக்கவாய்ப்புள்ளது என்றும் அதே சட்டம் கடல் பரப்புக்கு பொருந்தாது என்றும் கூறுகின்றனர்.
”மீனவர்களின் பாரம்பரிய அறிவை பயன்படுத்துங்கள்”
சீறும் கடல்அலைகளோடு போராடி வெல்லும் மீனவர்கள் , அரசுடன் போராடிய ஒவ்வொரு சமயமும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதாகக் கூறுகிறார் மீனவர் ஆன்டோ லெனின்.
”மீட்புப் பணியில் மீனவர்களை பயன்படுத்துங்கள் என்று பலமுறை கூறிவிட்டோம். எங்களின் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி ஆழ்கடலில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. தொழில்நுட்பத்தை நாங்கள் குறைசொல்லவில்லை. எங்களின் அறிவையும் பயன்படுத்துங்கள் என்று கோருவதில் என்ன தவறு. வாய்ப்பு அளித்தால்தானே எங்களின் கூற்று உண்மையா என்று தெரியவரும்?” என்று கேள்விஎழுப்புகிறார் மீனவர் லெனின்.
மீனவர்களின் பங்கேற்பை அவரச காலத்தில் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்துவதுகுறித்து பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ”மீனவர்களை ஆபத்துக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது நல்ல யோசனைதான். இதற்கான முயற்சிகளைச் செய்வோம். முதல் கட்டமாக அவசர காலங்களில் செயல்படுத்துவதற்கென சிறப்பு தகவல் தொடர்பு மையத்தை தொடங்கவேண்டும் என்றும் அதில் மீனவர்களையும் ஒரு பங்கேற்பாளராக கொள்ளவேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளேன்,” என்றார் மீன்வளத்துறை அமைச்சர் .
புயலை கணிப்பதில் தாமதம் ஏன்?
குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் என்றும் அவர்களுக்கு புயல் பாதிப்பு ஏற்படும் என்ற எச்சரிக்கை குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு முன்னதாக ஏன் தெரிவிக்கப்படவில்லை என்றும் மீனவர் லெனின் மற்றும் நாம் சந்தித்த குடும்பங்களில் இருந்த விதவைப் பெண்களும் கேள்வி எழுப்பினர்.
குளச்சலைச் சேர்ந்த மீனவ பெண்கள் சூசையம்மா, டென்சி உள்ளிட்டவர்கள் நம்மிடம் பேசியபோது புயலை கணித்து சொல்லியிருந்தால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்திருப்பார்கள் என்றும் பல குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கமாட்டார்கள் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
புயலை கணிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை பிரிவின் அதிகாரி பாலசந்திரனிடம் கேட்டபோது, ”தினமும் வானிலையில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை பற்றி மட்டுமே நாங்கள் அறிக்கை தருவோம். எங்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி காலை தெரிந்தவுடன் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தோம். டெல்லியில் உள்ள அதிகாரிகள்தான் புயல் பாதிப்பை பற்றி கணிக்க முடியும்,” என்றார்.
டெல்லியில் செயல்படும் புயல் எச்சரிக்கைக்கான பிராந்திய மையத்தின் இயக்குனர் மகோபத்ராவிடம் கேட்டபோது, ”ஒக்கி புயல் வரும் என்பதை நாங்கள் நவம்பர் 29-ஆம் தேதி காலைதான் கணிக்க முடிந்தது. ஒரு சில புயல் சீற்றத்தை காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்ட பிறகே கணிக்க முடியும். அதுபோலவே ஒக்கி புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தாமதமாகவே கணிக்க முடிந்தது. சில சமயம் அறிவியல் கணிப்புகளுக்கும் வரம்புகள் உள்ளன,” என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
புயல் பாதிப்பை கணிக்க மேம்பட்ட தொழில்நுட்பவசதிகள் இருந்தால் முன்னரே கணிக்கமுடியுமா என்று கேட்டபோது, ”டெல்லியில் நாங்கள் பணிபுரியும் புயல் எச்சரிக்கை மையம் உலகநாடுகளில் செயல்படும் ஆறு அதிநவீன மையங்களில் ஒன்று. இன்றளவில் தேவையான எல்லா தொழில்நுட்பவசதிகளுடன்தான் இயங்கிவருகிறோம். புயல் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் எவ்வாறு கணிப்பது என ஆராய்ச்சிகள் வளர்ந்த நாடுகளில் நடந்துவருகின்றன,” என்று புயல் எச்சரிக்கைக்கான பிராந்திய மையத்தின் இயக்குனர் மகோபத்ரா தெரிவித்தார்.
ஒக்கி புயல் பாதிப்பு ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை தெளிவாக தெரியவில்லை என்று பிபிசிதமிழிடம் தெரிவித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழக மீனவர்கள் கேரளாவில் தொடங்கி குஜராத் வரையிலும் சென்று மீன்பிடிப்பதால், அவர்களில் பலர் அண்டை மாநில கரைகளில் தஞ்சமடைந்திருப்பார்கள் என்று நம்புபவதாகக் கூறினார். -BBC_Tamil