இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, பெட்ரோலிய வளத்துறை, கடற்றொழில் நீரியல் வளம் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற படகுகளை அவர்களுக்கு மீள கையளிக்காததால், இந்திய மீனவர்களின் பிரவேசம் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு புதிதாக மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கப்போவதில்லை என இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.
-BBC_Tamil