மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் தொடர்ந்தால் தமிழகத்தின் தன்னெழுச்சிக்கு பயங்கரவிலை தரநேரிடும்

சென்னை: மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால் தமிழகம் உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இப்போது தமிழக அரசும் மத்திய அரசுக்கு சளைத்தது அல்ல என்கிற வகையில் சொந்த மண்ணின் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பதற்கு எதிர்வினையாக மிகப் பெரிய பயங்கரமான விலையை கொடுக்கப் போகிறார்களோ என்கிற கவலையைத்தான் கொடுக்கிறது.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்; மீனவர்களை காக்க தனி அமைச்சகம் அமைப்போம் என வாய்ச்சவடால் உறுதி மொழி தந்தது பாஜக. ஆனால் இதற்கான துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை டெல்லி பாஜக அரசு.

நீட் தேர்வு, கெயில் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என தமிழகம் எதையெல்லாம் எதிர்த்ததோ அதையெல்லாவற்றையும் மூர்க்கத்தனமாக டெல்லி திணித்துக் கொண்டிருக்கிறது. தமிழினத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டுவுக்கும் பெரும் முட்டுக்கட்டை போட்டு விளையாடிப் பார்த்தது டெல்லி.

அதிர்ந்த உலகம்

ஆனால் வரலாறு காணாத ஜல்லிக்கட்டு புரட்சியில் தமிழகம் குதிக்க சர்வதேச நாடுகளே அதிர்ந்து போயின. அப்போது எழுந்த முழக்கம், தமிழ்நாடு தமிழருக்கே என்பதை டெல்லி மறந்துவிட்டிருக்கலாம். ஆகையால்தான் அந்த போராட்டத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியது தமிழக அரசு.

அலட்சியம் தொடருகிறது

இந்த புரட்சி கொடுத்த பேரச்சத்தால்தான் இன்றளவும் மெரினாவையும் கருப்புச் சட்டையையும் கண்டாலே கிலிநடுங்கின்றன அரசுகள். நெடுவாசலிலும் கதிராமங்கலத்தில் மாதங்கள் கணக்கில் நீண்ட போராட்டங்களை கண்டுகொள்ளா போக்கின் மூலம் அலட்சியப்படுத்திச் சென்றன டெல்லி, தமிழக அரசுகள்.

ஓகியில் சிக்கிய மீனவர்கள்

நீட் தேர்வை திணித்து அனிதாக்களை பலியெடுத்துக் கொண்டன டெல்லியும் தமிழக அரசும். அனிதாவின் மரணத்தால் தமிழகமே தன்னெழுச்சி கிளர்ச்சி பூமியானதை அரசுகள் எளிதாக கடந்து சென்றுவிட்டன. இப்போது ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் ஓகி புயலில் சிக்கி என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

போர்க்கோலம் பூண்ட குமரி

மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் மாலத்தீவிலும் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டு வர 8 நாட்களாகியும் ஒரு கல்லைக் கூட அசைத்துப் போட கல்லுளிமங்கன் அரசாகத்தான் தமிழக அரசு இருக்கிறது. இதன்விளைவுதான் பொறுத்தது போதும் பொங்கி எழு என கன்னியாகுமரியின் மீனவ கிராமங்கள் போர்க்கோலம் பூண்டு இந்தியாவை அதிரவைத்தது.

பெரும் விலைதர நேரிடும்

12 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் உச்சமாகத்தான் ” கேரளாவோடு இணைவோம்” என்கிற பகிரங்க முழக்கம். தனிநாடு கோருவோம்… கேரளாவோடு இணைவோம் என்கிற முழக்கங்கள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் வந்து விழுகின்றனவை.. காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்றெல்லாம் மத்திய, மாநில அரசுகள் இப்போது மல்லாந்து படுத்துக் கொண்டு மனப்பால் குடிக்கலாம். ஆனால் இத்தகைய முழக்கங்கள் விஸ்வரூபமெடுத்தால் ஆகப் பெரும் விலையைத்தான் கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்தாக வேண்டிய கட்டாயம் விரைவில் வரும்!

tamil.oneindia.com

TAGS: