தெலங்கானா: புதிய மருந்துகள் பரிசோதனையில் உயிரிழப்பு, மனநலப் பாதிப்புகள் எனப் புகார்

புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கும், “மருத்துவ பரிசோதனைகளால்”, தெலங்கானாவிலுள்ள சில கிராமங்களில், பல மரணங்களும், திடீர் உளவியல் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பணத்துக்காக, சிலர் தானாகவே முன்வந்து, இந்த பரிசோதனைகளில் பங்கெடுப்பதாக, ஜம்மிகுண்டா பகுதி காவல்துறை ஆய்வாளர் பிரஷாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பறிபோன உயிர்

தெலுங்கானாவின், கரிம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜம்மிகுண்டாவில் வசித்த வங்கர நாகராஜூ, கடந்த ஜூன் மாதம் திடீரென இறந்ததாக அவரின் மகன் ஜகதீஷ் கூறுகிறார்.

“என் அப்பா, உணவு நிறுவனத்தில் பணியாற்றி வந்தால், ஒருநாள் முதுகுவலியால் நிலைகுலைந்து விழுந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, உயிரிழந்தார். ஏப்ரல் மாதத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளில் பங்குபெற்றதை நிரூபிக்கக்கூடிய சில ஆவணங்களை பிறகு நாங்கள் வீட்டில் கண்டெடுத்தோம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பலமுறை மருத்துவமனைக்கு சென்றுவந்த பிறகும், இன்னும் அவரின் பிரேத பரிசோதனையின் அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. இதில் சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனத்திடமும் நாங்கள் நீதி கேட்டோம், எந்த பயனும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்று ஜகதீஷ் கூறினார்.

பட்டப்படிப்பு படித்துவரும் ஜகதீஷ், தனது குடும்ப நிலைக்காக, ஓய்வு நேரங்களில் தினக்கூலி வேலைக்கு செல்கிறார்.

மனநல பாதிப்புகள்

கொத்தப்பல்லி கிராமத்தில் வசிக்கும் அஷோக், திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு, தற்போது, ஹைதரபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உணவு நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுரேஷ், ஹைதராபாத்தில், இத்தகைய மருத்துவ பரிசோதனைகள் குறித்து தனக்குத் தெரியும் என்று கூறுகிறார்.

நான் பணநெருக்கடி காரணமாக, இத்தகைய பரிசோதனையில் நான் பங்கெடுத்தேன். பரிசோதனைகளின் போது, மருந்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சில திரவங்களை பலவந்தமாக குடிக்கவைத்தார்கள். அப்போது சில அடியாட்கள் என் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தனர். பிறகு நான் ரத்தவாந்தி எடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை, தற்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற திட்டமிட்டுள்ளேன் என்று சுரேஷ் கூறினார்.

சிறப்புக்குழு

தெலங்கானா அரசு, மருத்துவ பரிசோதனையை ஒழிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கோபால் ரெட்டி தலைமையில், சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவின் அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மருத்து நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள்

செய்தியாளர்களிடம் பேசிய, நிதி மற்றும் நுகர்பொருள் அமைச்சரான எதிலா ராஜேந்தர், இத்தகைய குற்றங்கள், மத்திய அரசின் மருத்து கட்டுப்பாட்டுத் துறையின் கீழே வரும் என்றபோதிலும், நாங்கள் இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம். குழுவின் அறிக்கையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்` என்றார்.

இளைஞர்கள், பண நெருக்கடிக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதை இருந்தால், அரசை அணுகுமாறு கேட்டுகொண்டார்.

நாகராஜூ மீது, மருத்துவ பரிசோதனை செய்த லோட்டஸ் நிறுவனம் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து, லோட்டஸ் நிறுவனத்திடம் பிபிசி கருத்து கேட்க முயன்ற போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை.

விழிப்புணர்வு:

மருத்துவ பரிசோதனைகள், புதிய மருந்துகளை கண்டுபிடிக்க உதவுகின்றன. இதில் எந்த தவறான நடவடிக்கையும் இல்லை. மருத்துவத்துறையில், வளர்ச்சியை இது உறுதி செய்கிறது. என்று பிபிசியிடம் கூறுகிறார், கேர் மருத்துவமனையின், மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு தலைவரான டாக்டர் ஸ்ரீதர் திருநகரி.

மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான விதிமுறைகள்:

1.ஐரோப்பிய மருத்துவ முகமையால் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

2.மருந்து மற்றும் அழகு சதானங்கள் விதி 2005இல் ஒய் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை, மருத்துவ பரிசோதனையின்போது, நிறுவனங்கள் மிகவும் சரியாக பின்பற்ற வேண்டும்.

3.தனி மனிதரின், அனுமதியை ஒலி மற்றும் ஒளி ஆவணங்களாக பெற்ற பிறகே, அவரின் மீது, மருத்துவ பரிசோதனை செய்ய முடியும்.

4.இந்தியாவின் மருத்துவ பரிசோதனை பதிவகத்தில் (www.ctri.nic.in), இத்தகைய பரிசோதனைகளில் பங்கெடுத்தவர்கள் குறித்த தகவல்களை பதியவேண்டும்.

மருத்துவ பரிசோதனை முயற்சிகள், முதல் கட்டமாக, உயிருள்ள அணுக்கள் மீது நடக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் விலங்குகள் மீது நடக்கும். அதற்கு பிறகே, மனிதர்கள் மீது நடத்தப்படும் என்கிறார் ஸ்ரீதர்.

வெளிநாட்டு அரசுகள், மருத்துவ பரிசோதனைகளை ஊக்குவிக்கின்றன, சில தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் இதில் பங்கெடுக்கின்றன. இத்தகைய பரிசோதனைகளை உயிர்க்கொல்லியாக பார்ப்பது வருத்தமளிக்கிறது.

மனித உயிர்களை காக்கும் புதிய மருந்துகளை கண்டறிவதற்காகவே இத்தகைய பரிசோதனைகளை செய்கின்றோம். இதுகுறித்த தவறான பார்வைகள் விலக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேவை என்கிறார் அவர்.

-BBC_Tamil

TAGS: