சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு ; மேலும் 5 பேருக்கு தூக்கு தண்டனை

திருப்பூர்,

கலப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா.  அருகே  உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரும் -கவுசல்யாவும்  காதலித்து வந்தனர். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில்  இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது. இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார்.

பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே  இந்த சம்பவம் உலுக்கியது. இந்த கொலை வழக்கில்  கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.  இந்த வழக்கு  திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்  நீதிபதி அலமேலு நடராஜ் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  கவுசல்யா பெற்றோர் உட்பட  அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளி  என நீதிமன்றம்   தீர்ப்பு வழங்கியது.  சங்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 8  பேர்  குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல், ஸ்டீபன் தன்ராஜ், அடைகலம் கொடுத்த மற்றொரு மணிகண்டன் ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசல்யாவின் தந்தை உள்பட குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீது  இபிகோ 120பி, 147, 148, 302, 307, எஸ்சி- எஸ்டி சட்டப்பிரிவு 3(1), 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தரப்பில்  வாதம் எடுத்து வைக்கப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பிறகு தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி கூறினார்.

சங்கரின் கொலை பணத்திற்காக நடைபெறவில்லை, திட்டமிட்ட ஆணவக் கொலை  தனது மகளையும், இன்னொருவரின் மகனையும் கொலை செய்ய அனைத்து வகையிலும் உதவியாக இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் . சங்கர் கொலை வழக்கில் பிற்பகல் 12.50 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

கவுசல்யா தாயார்  அன்ன லட்சுமி, தாய்மாமா பாண்டிதுரை,  பிரசன்னா, ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதமும்  விதிக்கபட்டது. அபராதம் கட்ட தவறினால் 10 ஆண்டு சிறை தண்டனை.

கூலிப்படையை சேர்ந்த ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 7 வருடம் ஜெயில் தண்டனையும், ஆறாவது குற்றவாளியான செல்வகுமாருக்கும் தூக்கு தண்டனை.  சின்னசாமியின் நண்பர் ஜெகதீசனுக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது. மைக்கேல், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  ஸ்டீபன்  தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது.  கவுசல்யாவின் தந்தையை  தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள்.

-dailythanthi.com

TAGS: