செம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40 பேர் தப்பியதாக தகவல்

அமராவதி: செம்மரக் கடத்தல்காரர்களை விரட்ட திருப்பதி மற்றும் கடப்பாவில் ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரின் துப்பாகிச் சூட்டைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல்காரர்கள் 40 பேர் தப்பியதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் எனக் கூறி அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. உச்சகட்டமாக 20 தமிழர்களை காக்கை குருவிகளைப் போல ஆந்திரா போலீஸ் சுட்டுக் கொன்றது.

இதன்பின்னரும் தமிழக தொழிலாளர்களை மட்டுமே ஆந்திரா போலீஸ் குறிவைத்து தாக்குகிறது. ஆனால் இந்த செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை.

இந்நிலையில் இன்று திருப்பதி, கடப்பா வனப்பகுதிகளில் திடீரென ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். செம்மரக் கடத்தல்காரர்கள் தங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறது ஆந்திரா போலீஸ்.

இந்நடவடிக்கையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 40 பேர் தப்பி ஓடிவிட்டதாக ஆந்திரா போலீசார் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: