ஒகி புயலில் சிக்கிய 700 மீனவர்களை மீட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும் நிலையில், வீடு திரும்பாத மீனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறுகிறார்.
வியாழக்கிழமை மாலை 5 மணி வரை ஒகி புயலில் சிக்கிய 700 மீனவர்களை இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய விமான படை மீட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ள ஒரு ட்வீட்டில் இந்திய கடலோர காவல் படை 488 மீனவர்களை மீட்டுள்ளதாகவும், இந்திய கடற்படை 158 மீனவர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளதாகவும், இந்திய விமான படை 25 மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளதாகவும் விவரித்துள்ளது.
இதுவரை மீட்கப்பட்டவர்களில் 286 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 379 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், 30 பேர் லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவை சேர்ந்தவர்கள், 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்கிறது அந்த ட்வீட்.
மேலும் அந்த ட்வீட், 9 சடலங்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளதாகவும், 3 சடலங்களை இந்திய கடற்படை மீட்டுள்ளதாகவும் கூறுகிறது.
கணக்கெடுக்கும் பணி:
பிபிசி தமிழிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், “400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அதில் 35 மீனவர்கள் 13 நாட்டுப் படகுகளில் சென்றவர்கள், 365 மீனவர்கள் 34 விசைபடகுகளில் சென்றவர்கள்.” என்றார்.
“தினமும் மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். புதன்கிழமை மட்டும் 33 மீனவர்கள் கரை திரும்பி இருக்கிறார்கள்” என்று கூறிய அவர், “பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பு தொழிலில் மீனவர்கள் ஈடுபடுவார்கள். அந்த சமயங்களில் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அவ்வாறு சென்ற மீனவர்கள் கிறிஸ்துமஸுக்குள் வீடு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டு இருப்பதால், இப்போதே அவர்களை காணாமல் போனவர்களாக கருத முடியாது.” என்று கூறினார்.
தேடுதல் பணி தொடரும்:
கேரளாவில் ஒகி புயலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரள அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் தேடும் பணியைத் தொடர பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்” என்றார். -BBC_Tamil