சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களார்களுக்கும் அதிமுக சார்பில் ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அதே நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் உள்ளே பணத்தை வீசிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மணலி பகுதியில் பட்டியல் போட்டு, கவர்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்து விநியோகித்து வருபவர்களை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒவ்வொரு கவரிலும் சுமார் 6000 இருப்பதாகவும், பட்டியலில் வாக்காளர்கள் பெயர் முழு முகவரியுடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று தொகுதி முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் விநியோகித்திருப்பதாக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ஆர்.கே.நகரில் உள்ள பிசியோதெரஃபி மையத்தில் இருந்து 13 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆர் கே நகர் இடைத்தேர்தல்: ஓட்டுக்கு பணம், பரிசு அளிக்கப்படுவதாக குவியும் புகார்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும், பணம் விநியோகம்செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் தரப்படுவதாக அதிமுக, திமுக, டிடிவி தினகரன் தரப்பு என பலரும் கொடுக்கப்பட்ட புகார்கள் மட்டுமல்லாது தேர்தல் அதிகாரிகளும் சந்தேகத்தின் பேரில் சிலரை விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் தனியார் பிசியோதெரபி மையத்தில் ரூ.13 லட்சத்தோடு வாக்காளர்களின் விவரம் கொண்ட பட்டியலை தனது வயிற்றில் வைத்திருந்த நபர் ஒருவரை பிடித்த காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பானது.
அதிமுக சார்பாக பணம் பட்டுவாடா செய்ததாக ஒரு நபரை பிடித்துகொடுத்த போதும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்ததாக திமுகவினர் கொடுங்கையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
”அன்னை சத்தியா நகரில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு நபர் ரூ.2.58லட்சம் பணத்துடன் பிடிபட்டார். அவரிடம் இருந்த நோட்டில், வாக்காளர்களின் பெயர் பட்டியல், அவர்களின் அலைபேசி எண்களை எழுதி பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 கொடுத்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அவரை பிடித்தவுடன் நாங்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் பிடிபட்ட நபரை காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்,” என்று திமுகவைச் சேர்ந்த பரசுராமன் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
பணம் கொடுக்கவந்த நபரை பிடித்துக் கொடுத்தபோது, அன்னை சத்தியா நகரில் இருந்த வாக்காளர் சிலர் தன்னை திட்டியதாகவும் பரசுராமன் குற்றம்சாட்டினார்.
திமுகவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணம் கொடுக்க வந்த அன்புக்கரசன் என்ற நபர் மீது பணப்பட்டுவாடா செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது என்று ஆர் கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
”பறக்கும் படையினர் அளித்த தகவலின் பேரில் அன்புக்கரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். நாங்கள் தாமதம் செய்யவில்லை. வழக்கு பதிய தேவையான நடைமுறைகளை பின்பற்றியுள்ளோம்,” என்று ஆய்வாளர் புகழேந்தி கூறினார்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடந்த ஐந்து நாட்களாக ஒரு தனியார் கடையில் சுமார் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை நடந்துள்ளது என்றும் இதற்கும் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அதை தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும் என்றும் மனு அளித்துள்ளார்.
திமுகவும், டிடிவி தரப்பினரும் செய்யும் சூழ்ச்சியால்தான் பணப்பட்டுவாடா புகார்கள் வந்துள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
”ஜனநாயக நாட்டில் பணநாயகம் வெற்றி பெறாது. திமுக மற்றும் டிடிவி தரப்பினரைத் தோற்கடித்து அதிமுக ஆர் கே நகரில் வெற்றி அடையும் என்பது உறுதி. அதிமுக அளித்துள்ள புகார்களை தேர்தல் ஆணையம் முறையாக கையாளவேண்டும்,” என்று கூறினார்.
அதிமுகதரப்பினர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, ”பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கமுடியும் என்று எண்ணுபவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதிமுகவின் ஆட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில்தான் ஆர் கே நகரின் தேர்தல் முடிவு இருக்கும்” என்று தெரிவித்தார்.
ஆர் கே நகர் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேர்தல் ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் பத்ரா ஆர் கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்றும் தற்போது அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து தேர்தலை திறம்பட நடத்தமுடியும் என்பதில் நம்பிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பத்ரா, ”தேர்தல் ரத்து செய்வது அந்த சூழலைப் பொருத்து உள்ளது. தற்போது அதைப் பற்றி உறுதியாக சொல்லமுடியாது,” என்று கூறினார். -BBC_Tamil