சென்னை: ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குமரி வந்தடைந்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளைத் தாக்கியது. சில மணிநேரங்களிலேயே கன்னியாகுமரியை உருக்குலைத்தது. இந்த ஓகி புயலில் சிக்கி மாயமான 600 மீனவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் ஓகி புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்துள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று மங்களூரு வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பளித்தனர். இதன்பின்னர் இன்று லட்சத் தீவு பகுதிகளை முதலில் பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கிருந்து திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதற்கட்டமாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர் குடும்பங்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரதமர் ஆறுதல் கூற இருக்கிறார். இந்த கூட்டத்தில் குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவாரா என்று குமரி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.