தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் டிடிவி தினகரன், தங்கள் பக்கமே அ.தி.மு.க. இருக்கிறது; மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்று காட்டத்துடிக்கும் ஆளும் அ.தி.மு.க, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்று நிரூபிக்கத் துடிக்கும் தி.மு.க. என மூன்று துருவங்களால் இழுபடுகிறது சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த இத்தொகுதியில் கடந்த ஏப்ரலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களுக்குப் பெரிய அளவில் பணம் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் இந்தத் தொகுதியில், செவ்வாய்க்கிழமையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு.
1977ல் உருவாக்கப்பட்டதிலிருந்து பதினொரு முறை தேர்தலைச் சந்திருக்குக்கும் இத்தொகுதியில் அதிக தடவைகள் அ.தி.மு.கவே வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது ஏழு முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்தது. காங்கிரஸ் இரண்டு தடவையும் தி.மு.க. இரண்டு தடவையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.
2011ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், தான் மீண்டும் போட்டியிடுவதற்கு இந்தத் தொகுதியையே தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவியாக அப்போது இந்தத் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினமா செய்தார் (இந்த வெற்றிவேல் தற்போது டிடிவி தினகரன் அணியில் இருக்கிறார்).
எதிர்பார்த்ததைப் போலவே அந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதனால், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் அவர்.
2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்த பிறகு, 2017 ஏப்ரலில் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே அணியாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் பெயரும் முடக்கப்பட்டிருந்தது. எடப்பாடி – சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் விளக்குக் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தன. எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இ. மதுசூதனனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் அப்போது வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பாக, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
பிறகு, இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென வழக்குகள் எல்லாம் தொடரப்பட்ட நிலையில், இப்போது டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
குறுகலான சாலைகள், குப்பை, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளில் தவிக்கும் இத்தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக மூச்சுத் திணறிப்போயிருக்கிறது. அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் தொகுதியின் பல சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால், ஏற்கனவே நெரிசலாகக் காட்சியளித்த பல சாலைகளில் இப்போது வாக்குகேட்டு நடக்கும் ஊர்வலங்களால் மொத்தமாக முடங்கிப் போயிருக்கின்றன.
தினகரன் பலம் என்ன?
இங்கு யார் வெற்றிபெறுவது என்பது ஒரு புறமிருந்தாலும், தொகுதியின் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டவராக இருக்கிறார் டிடிவி தினகரன். கடந்த முறை, சசிகலா தலைமையிலான அணியில் இருந்த டிடிவி தினகரனுக்காக ஆளும்கட்சி மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. அதன் தாக்கம் இப்போதும் தொகுதிக்குள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
கடந்த முறை இரட்டை இலை முடக்கப்பட்டதால் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் இந்த முறை ஒரு சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தினகரனுக்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அந்தச் சின்னம் தொகுதிக்குள் பிரபலமாகியிருக்கிறது.
குக்கர் படம் பொறித்த கொடிகள், தினகரன் வரும்போது குக்கர் கோலங்கள், தொண்டர்களின் கையில் குக்கர் என எல்லா வழிகளிலும் குக்கரை வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார் தினகரன். தவிர, அவரது பிரச்சாரக்கூட்டங்களுக்கு கூடும் கூட்டமும் உற்சாகமும் பிற கட்சிகளை கவலைக்கு உள்ளாக்கவே செய்திருக்கின்றன. -BBC_Tamil