காணாமல் போன மீனவர்களை மீட்க துரித கதியில் செயல்படவில்லை… பிரதமரிடம் மீனவர்கள் புகார்!

கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிதொழில் நடத்த ஏதுவாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாற்றிப் போட்டது ஓகி புயல். புயல் பாதிப்புகளால் ஒரு பக்கம் குமரி உருக்குலைந்து போயிருக்க 80க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் தவியாய் தவித்து வருகின்றனர் மீனவ கிராம மக்கள்.

காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புயல் காரணமாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு டீசல் மற்றும் உதவித்தொகை கொடுத்து அரசு அவர்கள் தமிழகம் திரும்ப வழிவகை செய்தது.

எனினும் பல மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் மீனவ கிராம மக்கள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கரை திரும்புவார்கள் என்பதால் டிசம்பர் 23ம் தேதி எத்தனை மீனவர்கள் கரை திரும்புகிறார்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள்.

இதனிடையே இன்று குமரி மாவட்டம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மீனவ கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் அவர்களின் குறைகளை கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்தே மீனவர்களை சிலரை சந்தித்து பேசியுள்ளார். பிரதமரை சந்தித்துள்ள அந்த மீனவ மக்கள் காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு துரித கதியில் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர்.

ஓகியால் படகுகள் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அவற்றை சரிசெய்ய அரசு கூடுதல் நிவாரணம் தர வேண்டும். மீன்பிடி தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு மீனவர்களின் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் சரியான நிவாரணம் வழங்கி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வழி செய்யும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: