ராசா மீது தப்பே இல்லை.. பொறுப்பற்ற அதிகாரிகளால் வந்த வினை.. தீர்ப்பில் புட்டுபுட்டு வைத்த ஓ.பி.ஷைனி

டெல்லி: 2ஜி வழக்குக்கு காரணம் ஆ.ராசா அல்ல பொறுப்பற்ற அதிகாரிகள்தான் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார். 2ஜி வழக்கில் இன்று 1552 பக்க தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள். மத்திய தகவல் தொடர்பு துறை கொள்கை முடிவுகள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுக்கே கொள்கை முடிவின் உண்மையான அர்த்தம் தெரியவில்லை.

அதிகாரிகள் சந்தேகம்

அதிகாரிகளின் தேவையற்ற சந்தேகங்களால்தான் 2ஜி அலைக்கற்றை சர்ச்சையே எழுந்துள்ளது. ஆ.ராசா தவறான முடிவு எடுத்து சதி செய்து ஊழல் புரிந்ததாக சிறு அளவும் ஆதாரம் இல்லை.

தப்பான குற்றப்பத்திரிகை

அலுவலக ஆவணங்களை சரியாகப்படிக்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்பபடையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் நீதிமன்றத்தில் அதனை மறுத்துவிட்டனர். வாய் மொழி வாக்குமூலங்கள் சட்டப்படி செல்லாது.

எழுத்துப்பூர்வ வாதம்

பலமாதங்களாக வாதிட்ட சிபிஐ வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவில்லை. நீதிமன்றம் கண்டித்த பிறகே எழுத்துப்பூர்வ வாதங்களை சிபிஐ சமர்ப்பித்தது.

குளறுபடி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குளறுபடிக்கு காரணம் அதிகாரிகள். பொறுப்பற்று செயல்பட்ட அதிகாரிகள் மற்றவர்கள் மீது குற்றத்தை சுமத்தி விட்டனர். 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க பிரதமர் அலுவலகத்தில் யாரோ ஒருவர் ஒப்புதல் தந்துள்ளார். பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி புலோக் சாட்டர்ஜி ஆக இருக்கலாம்.

சிபிஐ வாதம்

பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் ஆ.ராசா தவறான தகவல் அளித்தார் என்பது சிபிஐ வாதம். 2ஜி புதிய உரிமம் வழங்குவது குறித்து மன்மோகனுக்கு ஆ.ராசா பல கடிதங்கள் அனுப்பி இருக்கிறார். ஆ.ராசா எழுதிய கடிதங்கள் மன்மோகன்சிங்கிடம் தெரிவிக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் இல்லை.

பிரதமரிடம் மறைத்த அதிகாரி

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் புதிய வழிமுறைகள் பற்றி மன்மோகனுக்கு ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் அலுவலக அதிகாரி புலோக் சாட்டர்ஜி ராசாவின் முக்கிய கடிதங்களை மறைத்துவிட்டார். ஆ.ராசா எழுதிய கடிதங்களின் ஒரு பகுதி மட்டுமே மன்மோகனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகனிடம் தவறான தகவல் கொடுத்தது அதிகாரிகள்தான்; ஆ.ராசா அல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: