புதுடெல்லி,
கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ‘ஒகி’ புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி, கேரளத்தின் கடலோர பகுதி, லட்சத்தீவை கடுமையாக தாக்கியது. இதில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 450-க்கும் அதிகமான மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்த புயல் குறித்தும், இயற்கை சீரழிவுகள் பற்றியும் பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது.
போதுமானது அல்ல
அப்போது கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சி.வேணுகோபால் பேசும்போது, “ஒகி புயலால் கேரளாவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. எனவே இதை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி உதவி செய்யவேண்டும். புயல் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தால் பலி எண்ணிக்கை குறைந்து இருக்கும். இதுபோன்ற புயல் சின்னம் குறித்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும். இன்னும் மீட்கப்படாத மீனவர்களை மீட்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பேசும்போது “ஒகி புயலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும். வானிலை பற்றி முன்னறிவிப்பு செய்வதற்காக சேட்டிலைட் ரேடியோ சேனல் ஒன்றைத் தொடங்கவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுக்கு ரூ.325 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது போதுமானது அல்ல” என்றார்.
வலியுறுத்தல்
கேரளாவை சேர்ந்த சசிதரூர் (காங்கிரஸ்), பி.கருணாகரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்), என்.கே.பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி) ஆகிய எம்.பி.க்களும், ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிஜூ ஜனதாதளம், தெலுங்குதேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்களும் பேசினர்.
விவாதத்தின் முடிவில் பதில் அளித்து பேசிய, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும். அவர்களுக்கு தோளோடு தோள் நிற்கும். இந்த புயல் அரிதினும் அரிதான ஒன்று. 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள கடற்கரையோர பகுதிகளை பாதித்து உள்ளது.
புயல் பாதிப்பு குறித்து, மத்திய நிபுணர் குழு வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்திலும், கேரளாவிலும் ஆய்வு செய்யும். அதையடுத்து, அந்த குழு அளிக்கும் அடிப்படையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. மற்றபடி புயலால் ஏற்படும் பாதிப்புகளை தீவரமான இயற்கை பாதிப்பாக கருதி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புயல் பாதிக்கப்படாத குஜராத்துக்கு 7 மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது தவறு. இது அடிப்படை ஆதாரமற்றது.
மீட்பு தொடர்கிறது
காணாமல் போன மீனவர்களை மீட்க கடற்படை, கடலோர காவல்படையினர் 759 மணி நேரம் பறந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஒகி புயலால் 18 பேர் பலியாகி இருக்கின்றனர். 275 பேரை காணவில்லை. கேரளாவில் 74 மீனவர்கள் இறந்து உள்ளனர். 215 மீனவர்கள் மாயமாகிவிட்டனர். 700 கடல் மைல் தூர அளவிற்கு கடலில் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-dailythanthi.com