லக்னோ,
உத்தரபிரதேசத்தில் ஆண்டுதோறும் விஷ சாராயத்துக்கு ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர். எனவே இதை கட்டுப்படுத்துவதற்காக, விஷ சாராயம் விற்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த சட்டத்துக்கு பதிலாக, ‘உத்தரபிரதேச கலால் (திருத்தம்) மசோதா 2017’ என்ற மசோதா நேற்று மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், குரல் ஓட்டெடுப்புடன் மசோதாவும் நிறைவேறியது.
இந்த மசோதாப்படி மாநிலத்தில் விஷ சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதை விற்பனை செய்தவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். விஷ சாராயத்தால் ஊனம் ஏற்பட்டால், விற்பனையாளர்களுக்கு 6 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
டெல்லி, குஜராத்தை தொடர்ந்து விஷ சாராய விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள 3-வது மாநிலம் உத்தரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
-dailythanthi.com