பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, அவர் குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
மரண தண்டனை அளிக்கப்பட்டது குறித்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வாதிட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜாதவின் தாய் மற்றும் மனைவி ஆகியோர் அவரை இஸ்லாமாபாத்தில் சந்தித்தனர்.
பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு பலூசிஸ்தானில் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.
தான் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறுவதைப் போன்ற ஒரு காணொளியை பாகிஸ்தான் அப்போது வெளியிட்டது.
அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜாதவை சந்திக்க சென்ற அவரது தாய் அவந்தி மற்றும் மனைவி சேட்டன்குலோடு இந்திய தூதர்களும் உடன் இருந்தனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
“மனிதநேய அடிப்படையில்” இந்த சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மொஹமத் ஃபைசல் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்புக்கிடையே ஜாதவின் குடும்பத்தினர் கொண்டுவரப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி இந்தி செய்தியாளர் ஷூமைலா ஜெஃப்ரி தெரிவிக்கிறார்.
மேலும், “இருவரும் தீவிரமான மனநிலையில் இருந்தனர். செய்தியாளர்கள் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டும், பதில் ஏதும் கூறாமல், அலுவலகத்தை நோக்கி அமைதியாக அவர்கள் நடந்தனர்” என்றும் நமது செய்தியாளர் கூறுகிறார்.
யார் இந்த குல்பூஷன் ஜாதவ்?
- 46 வயதான ஜாதவ் மும்பையை சேர்ந்தவர்.
- பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர்.
- சொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
- 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் ராணுவ நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.
- திருமணமான ஜாதவுக்கு குழந்தைகளும் உள்ளனர்.
ஜாதவின் வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போராடி வருகின்றன.
மேலும், இறுதி முடிவெடுக்கும் வரை ஜாதவை தூக்கிலிடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

























