பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர்: குடும்ப சந்திப்பு நிகழ்ந்த விதத்தில் இந்தியா அதிருப்தி

பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு விதித்த மரண தண்டனைக்கு, இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்று சர்வதேச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.

அவரது குடும்பத்தினர் அவரைச் சந்திக்க வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

  • இந்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளனர். இரு தரப்பிலும் தெளிவான புரிந்துணர்வு எட்டப்பட்டது. இந்தியத் தரப்பு தாங்கள் ஒப்புக்கொண்டபடி நடந்துகொண்டது.
  • புரிந்துணர்வுக்கு முரணாக, பாகிஸ்தான் ஊடகங்கள் குல்புஷன் ஜாதவின் குடும்பத்தினரை அணுகவும் துன்புறுத்தும் கேள்விகளை கேட்கவும் பல சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டன. பாதுகாப்பு சோதனை எனும் பெயரில் அக்குடும்பத்தின் மத உணர்வுகள் புறந்தள்ளப்பட்டன. தாலி, வளையல், பொட்டு ஆகியவை அகற்றப்பட்டதுடன், அவர்கள் ஆடையும் மாறவேண்டியிருந்தது. இது பாதுகாப்புக் காரணத்துக்கு அவசியமில்லாதது.
  • குல்புஷன் ஜாதவின் தாயார் அவருடன் தனது தாய் மொழியில் பேச அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தாய் மொழியைப்பயன்படுத்தியபோது அவர் குறுக்கீடு செய்யப்பட்டார். இறுதியில் அவரது தாய் மொழியில் பேசுவதில் இருந்தே தடுக்கப்பட்டார்.
  • இந்தியாவுக்கான டெபுடி துணைத் தூதருக்கு தகவல் அளிக்காமலே இந்தச் சந்திப்பு தொடங்கப்பட்டது. தொடர்புடைய அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பின்னரே அவர் அந்த சந்திப்பு நிகழ்ந்த இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும், ஒப்புக்கொள்ளப்பட்டபடி அல்லாமல், அவர் இருந்த பகுதியில் கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
  • குல்புஷன் ஜாதவின் மனைவி அணிந்திருந்த காலணிகள், அவர் பல முறை வலியுறுத்திய பின்னரும், அந்த சந்திப்பு முடிந்த பிறகும் அவரிடம் திருப்பி வழங்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதில் ஏதேனும் தீய நோக்கங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கிறோம்.
  • குல்புஷன் உடனான சந்திப்புக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்த பின்னூட்டங்களின் அடிப்படையில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதும், கொடுமைக்கு ஆளாகியுள்ள சூழலில் அவர் பேசுவதும் தெரிகிறது.
  • குல்புஷண் அளித்த பல பதில்கள் அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவையாகவும், அவர் பாகிஸ்தானில் செய்ததாக பாகிஸ்தான் கூறுகிறவற்றுக்கு வலு சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன. அவரது தோற்றம் அவரின் உடல் நலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.
  • அந்தச் சந்திப்பு நிகழ்த்தப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குல்புஷன் ஜாதவின் நடத்தை குறித்த பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு வலுவாக்கும் விதமாகவே இருந்தன. இந்த நடைமுறை அனைத்தும் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது.

-BBC_Tamil

TAGS: