இந்த ஆண்டு (2017) ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன. அதில் பலரின் கவனத்தையும் ஈர்த்த சில போராட்டங்கள் குறித்த தொகுப்பு.
1. ஜல்லிக்கட்டு போராட்டம்
சமீபத்தில், தேடுதல் தளமான கூகுள் 2017-இல் இந்தியாவில் அதிக முறை தனது தளத்தில் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்து ஒரு பட்டியலிட்டிருந்தது. அதில் what is Jallikattu? எனும் கேள்வி அதிகம் பேரால் தேடப்பட்டிருந்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு மக்களாலும் ஜல்லிக்கட்டு குறித்து கூகுளில் தேடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் வெடித்த போராட்டமே.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் சென்னை மெரினா, அலங்காநல்லூர் என பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. நாட்கள் நகர, நகர போராட்டம் திருச்சி, கோயமுத்தூர் என பல இடங்களுக்கும் விரிவடைந்தது. போராட்டக்களங்களில் பெண்கள் குழந்தைகள் கூட இரவு முழுவதும் தங்கியிருந்தனர். மிகப்பெரிய எண்ணிக்கையில் நடந்த இந்த போராட்டத்துக்கு பெண்கள் தமிழகத்தில் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றிருப்பது, தகவல் தொடர்பு அம்சங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்பட்டன.
2. கதிராமங்கலம் போராட்டம்
2017-ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் உபகரணங்களைக் கொண்டு வந்தனர். மீத்தேன் திட்டம் தொடர்பான ஆய்வுகளுக்காக அவை கொண்டுவரப்படுவதாக நினைத்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜூன் மாதத் துவக்கத்தில் காவல்துறை உதவியுடன் ஓ.என்.ஜி.சி. பராமரிப்புப் பணிகளைத் துவக்கியது. அந்த கிராமமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டுமெனக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர் .கசிவு ஏற்பட்ட குழாய்க்கு அருகில் இருந்த வைக்கோல்போரில் தீ வைக்கப்பட்டது. யார் தீ வைத்தது என்பது குறித்து முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன.காவல்துறை தடியடி நடத்தி மக்களைக் கலைத்தது. பத்து பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது.#SAVE TN KATHIRAMANGALAM என்ற டேக்கில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ட்வீட் செய்யப்பட அந்த டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது.
3. விவசாயிகள் போராட்டம்
இந்த ஆண்டு தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. செருப்பால் அடித்துக் கொண்டு போராட்டம்; மணலில் கழுத்து வரை புதைத்து போராட்டம்; ஒப்பாரி போராட்டம்; நிர்வாண போராட்டம்; தூக்கு கயிற்றுடன் போராட்டம் என வெவ்வேறு வகையில் நூறு நாட்கள் தொடர் போராட்டம் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகளால் நடத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுமார் 40 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 16-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் அக்டோபர் 23-ம் தேதி வரை நீடித்தது. விவசாயிகள் கடன்கள் ரத்து, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
4. நெடுவாசல்போராட்டம்
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் முதல் கட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதாக பிப்ரவரி 15-ல் செய்தி வந்ததையடுத்து விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து போராட்டம் உருவானது. பின்பு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவியது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து மக்களுக்கு ஆதரவளித்தனர். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் ஜெம் லெபாரட்ரிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. எனினும் மக்களின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.
5. நீட் தேர்வு போராட்டம்
கட்டாய நீட் மருத்துவ நுழைவுத் தேர்வால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரும் இரண்டு அவசர சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது அதற்கு ஒப்புதல் வழங்க வாய்ப்பு குறைவு என மத்திய அரசு கூறியது. இதையடுத்து மத்திய அரசின் யோசனைப்படி நீட் தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விளக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பதாக தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. ஆனால் பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் அளிக்க முடியாது என தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்தியது. இதனால் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட, பிளஸ் டூ முடித்துவிட்டு அதிக மதிப்பெண் பெற்றபோதும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர முடியாமல் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கருத்து எழுந்த நிலையில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீட் தேர்வே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
6. மீனவர் போராட்டம்
நவம்பர் இறுதி முதல் டிசம்பர் மாதம் வரை நடந்த ஒகி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்த புயலில் இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் கூறுவதாகவும், புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளை அரசு துரிதமாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்கிடையில் டிசம்பர் 11-ம் தேதியன்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான 23 கப்பல்களும், 3 டோர்னியர் விமானங்களும், 1 ஹெலிகாப்டரும் ஈடுபட்டதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்தது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மினிகாய் தீவுகளின் கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இன்னமும் இறந்த மீனவர்கள், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான விவரங்கள் இல்லை என மீனவ அமைப்புகள் கூறி வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் ஆங்காங்கே ஒரு சில உடல்கள் மீட்கப்பட்டன. -BBC_Tamil