திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையை கட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதத்தாலும் மின்சார விற்பனையில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றாததாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்காளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் என்ற இடத்தில் அணு உலைகளைக் கட்டிவருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள ஆறு அணு உலைகளை ரஷ்யக் கூட்டமைப்பின் உதவியுடன் இங்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது இரண்டு அணு உலைகள் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
முதல் இரண்டு அலகுகளும் கட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவற்றின் நிதி மேலாண்மை எப்படி இருந்தது என்பது குறித்த மத்திய அரசின் தலைமைக் கணக்காளரின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தவிர்த்திருக்கக்கூடிய வட்டியைக் கட்டியிருப்பது, கடன்களை வாங்கியதில் வெளிப்படைத் தன்மையின்மை, மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிப்பதில் இருந்த ஓட்டைகள், வெளிநாட்டு கூட்டாளிக்குக் காட்டப்பட்ட தேவையில்லாத சலுகைகள் ஆகியவற்றின் காரணமாக இந்த அணு உலைகளின் செலவு ஏகத்திற்கும் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கூடங்குளம் அணு உலையில் 1 மற்றும் 2வது அலகு தற்போது இயங்கிவருகிறது. மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பணிகள் துவங்கிவிட்டன. 5 மற்றும் ஆறாவது உலைகளுக்கான பணிகள் துவங்கவில்லை.
2001ல் கூடங்குளம் அணு உலை அலகுகள் 1-2 திட்டமிடப்பட்டபோது, 13,171 கோடி ரூபாய் செலவாகும் என்று கருதப்பட்டது. ஆனால், 2014ல் இந்தச் செலவு 22,462 கோடியாக உயர்ந்திருந்தது. முதல் உலையைத் துவங்குவதில் 86 மாதங்களும் இரண்டாவது உலையைத் துவங்குவதில் 101 மாதங்களும் தாமதம் ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு கூட்டாளி, கருவிகளை கொடுப்பதிலும் ஆவணங்களைக் கொடுப்பதிலும் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என்றும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
நிதி நிர்வாகம், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது, மின்கட்டணத்தை நிர்ணயிப்பது ஆகியவை குறித்த கவலைகளும் இருப்பதாக தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.
அணுஉலையின் முதலாவது அலகிலும் இரண்டாவது அலகிலும் ரஷ்யர்கள் செய்துதரவேண்டிய பணிகளை செய்யப் பொறுப்பேற்றிருந்த ஆட்டோம்ஸ்ட்ராய்எக்ஸ்போர்ட் செய்த தாமதத்தினாலேயே உலைகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இந்த நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டிய பணம் முன்பே கொடுக்கப்பட்டதால் என்சிபிஐஎல்லுக்கு 449.42 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்கிறது தணிக்கை அறிக்கை.
ரஷ்யர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை தள்ளிப்போட்டிருந்தால், அதற்கான வட்டித்தொகை குறைவாகவே இருந்திருக்கும். ஆனால், அப்படித் தள்ளிப்போடாமல் வெளியில் கடன் வாங்கி அந்தத் தொகையை அளித்த வகையில் 76.02 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தவிர மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து 1000 கோடி ரூபாயை கடனாகப் பெற்றது இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன்.
உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கிய கடனுக்கான வட்டியை கணக்கில் கொள்ளாமல் நிர்ணயம் செய்ததால் 90.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணு உலையின் முதலாவது அலகில் எரிபொருள் நிரப்ப 60 நாட்கள்தான் உலையை மூட வேண்டும். ஆனால், இதற்காக 2015 ஜூன் 24 முதல் 2016 ஜனவரி 31 வரை உலை மூடப்பட்டதில் 947.99 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
ஆட்டோம்ஸ்ட்ராய்எக்ஸ்போர்ட் அணுஉலைக் கட்டுமானத்திற்கான பொருட்கள், ஆவணங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் கட்டுமானச் செலவு அதிகரித்து 264.79 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனை அந்த நிறுவனத்திடமிருந்து என்பிசிஐஎல் வசூலிக்கவில்லை.
அலகு ஒன்றில் பயன்படுத்தப்பட்ட டர்பைன் எந்திரத்தில் தயாரிப்புக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய 12.76 கோடி ரூபாய் செலவானது. இதை ஆட்டோம்ஸ்ட்ராய் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க என்சிபிஐஎல் முயற்சிக்கவேயில்லை. இந்த இயந்திரம் நின்றதால், மின் உற்பத்தி முடங்கி, கூடுதலாக 53.73 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
ஆட்டோம்ஸ்ட்ராய் நிறுவனத்தால் 463.08 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையிலும் அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகைக்காக கூடுதல் வட்டியில் வெளியில் கடன் வாங்கியது என்சிபிஐஎல் என்பதையும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல, அணுசக்தி நீராவி சப்ளை எந்திரம், டர்போ ஜெனரேட்டர் பணிகளை ரஷ்ய நிறுவனம் செய்வதற்குப் பதிலாக இந்தியா பணியாளர்களே செய்துகொள்ளும்வகையில் மாற்றப்பட்டதில் 706.87 கோடி ரூபாய் கூடுதல் செலவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவுகள் மட்டுமல்லாமல், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையான அனுமதிகளைப் பெறுவதிலும் கூடங்குளம் அணுஉலை தவறியுள்ளது என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையான அனுமதிகளைப் பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே 2014 டிசம்பர் 31ஆம் தேதி வர்த்தக நடவடிக்கைகளைத் துவங்கியதாக தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல, இறுதி பாதுகாப்பு சோதனை அறிக்கை எப்போது செய்து முடிக்கப்பட்டது என பல முறை கேட்கப்பட்டபோதும், அது தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லையென்றும் வர்த்தக நடவடிக்கை தொடங்கியபோது தேவையாந எல்லா பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்பட்டதா என்பதில் தெளிவு இல்லை என்றும் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.
கூடங்குளம் அணுஉலை அலகு ஒன்று மற்றும் இரண்டில் இந்திய நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணியில் ஏற்பட்ட தாமதத்தால், 2001க்கும் 2014க்கும் இடையில் செலவு 3,823.82 கோடி அளவுக்கு அதிகரித்ததாக தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. -BBC_Tamil