மும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இருக்கும் விடுதி ஒன்றில், நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், கே ஈ எம் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆறு பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 12 பேர் பாட்டியா மருத்துவமனையிலும், இரண்டு பேர் லோக்மான்ய திலக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அந்த விடுதியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த 28 வயதான பெண் ஒருவரும் இந்த தீ விபத்தில் பலியாகி உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. கட்டடத்தின் மேற்பகுதியில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி ஆணையர் அஜய் மேத்தா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நரேந்திர மோதி உள்ளிட்டோர் இந்தத் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
கமலா மில்ஸ் காம்பவுண்டில், பெருநிறுவன அலுவலகங்கள், ஊடக அலுவலங்கள், பொது விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. அப்பகுதியில் சில கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
100 பேரை காப்பாற்றிய காவலாளி
அக்கட்டட வளாகத்தில் காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த மகேஷ் சப்லே தீயிலிருந்து 100-150 பேரை காப்பாற்றியுள்ளார்.
விபத்து ஏற்பட்ட அதே கட்டடத்தில் உள்ள மொசொன்ஸ் உணவகத்தில் இருந்த பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தீயிலிருந்து தப்பிக்க அங்குள்ள கழிப்பறைக்குள் புகுந்து கொண்ட சிலர், அங்கேயே உயிரிழந்தனர்.
நுழைவாயிலில் இருந்த காவலாளி மகேஷ், கட்டடத்தில் இருந்தவர்களை உடனடியாக எச்சரித்தார்.
மேலும் இரண்டு காவலாளிகளான சூரஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் அனைவரையும் எச்சரித்து, கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேற உதவி செய்தனர்.
பிபிசி செய்தியாளர் ஜானவி மூலே அளித்த தகவலின்படி, தீ விபத்திலிருந்து 100-150 பேரை காவலாளி மகேஷ் சப்லே காப்பாற்றியுள்ளார். -BBC_Tamil