நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக்குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.
நான் ஆள்வது என்பது, என் உரிமை. வேறு ஒருவர் ஆள்வது என்பது, நான் அடிமை. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை. மன்னராட்சி காலத்தில் படை எடுத்து வந்து ஆண்டார்கள். இவர், படம் நடித்துவிட்டு வந்து ஆளுவாரா?.
காவிரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக்கணக்கானவர்களை சொந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேசவில்லையே ஏன்?.
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். அவரை எதிர்த்துதான் அரசியல் செய்வோம். ரஜினி வருகை தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. எந்தந்த இடத்தில் ‘சிஸ்டம்’ சரி இல்லை என்பதை கூறமுடியுமா?.
பெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித்தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சொல்லி இனத்தை மாற்றினால் ஏமாற்றுகிறாய் என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர்களாகி விட்டால், நாங்கள் யார்?.
வெள்ளைக்காரன் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆண்டதால் இந்தியன் ஆகிவிடமுடியுமா?. வெள்ளைக்காரன் நல்லவன் இல்லையா?. நாட்டில் பல திட்டங்களை கொண்டு வந்தது யார்?. 8 கோடி தமிழனில் நாட்டை ஆள யாருக்கு தகுதியில்லை, எல்லாரும் நேர்மையற்றவர்கள் என்று கூறுவதா?.
உலகத்திலேயே தமிழன்தான் சிறந்தவன். தமிழக மக்கள் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை விட்டுவிட்டு செத்துக்கொண்டு இருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி கூறி உள்ளார். வரட்டும். தமிழகத்தை பார்த்து தற்போது எல்லாரும் சிரிக்கத்தான் செய்கின்றனர்.
ரஜினியை பாரதிய ஜனதா கட்சி இயக்குவதாக நினைக்கிறேன். அவரை பாரதிய ஜனதாதான் இறக்குகிறது. கமல்ஹாசன் மவுனமாக இருக்கும்போது இவர் பேசுவதும், இவர் மவுனமாக இருக்கும்போது அவர் பேசுவதற்கும் உத்தரவு வேறு இடத்தில் இருந்து வருகிறது.
ஆன்மிக அரசியல் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. சித்தர்கள், யோகிகள் வாழ்ந்த நிலம் தமிழகம். தன்னலமற்ற மக்களுக்கும், மண்ணுக்கும் உழைத்த மாபெரும் மேதைகள், தியாக செம்மல்கள் வாழ்ந்த பூமி இது. ஒரு தலைமுறை இளைஞர்கள் தன்னலமற்று உழைக்கத் தயாராகி வருகின்றனர். ஒரே நாளில் கட்சியை தொடங்கி, ஆட்சியை பிடிப்பது என்பது தமிழகத்தில் இனி சாத்தியமில்லை.
மன, இன உணர்வு கொண்ட இளைஞர்கள் எழுந்து வந்துவிட்டனர். ஆன்மிக அரசியல் புதிதாக இருக்கிறது. எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம். என்ன சேவை செய்யப்போகிறார். 2021-ம் ஆண்டு வரை வாய்த்திறக்கப் போவதில்லை.
‘ஒக்கி’ புயலில் சிக்கிய மீனவர்கள் இதுவரை திரும்பவில்லை. அவர்களை மீட்காமல் இந்த அரசு கைவிட்டு விட்டது. அனிதா இறப்புக்கு எல்லோரும் போனார்கள். நீங்கள் போகாதது ஏன்?. உங்களுக்கு தேவையென்றால் வருவீர்கள். இந்த மண்ணை என்னவாக நினைக்கிறீர்கள்.
சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா?. தமிழக மக்களை ஒரு இழிவான பார்வையாக பார்ப்பதா?. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசியல் கட்சி தொடங்க முடியுமா?.
மக்களுக்காக போராட்டங்களை நாங்கள் நடத்துவோம். நீங்கள் கோட்டைக்கு போய் ஆட்சி, அதிகாரம் செய்வீர்களா?. மக்களுடன் மக்களாக நின்று போராடுபவன்தான் மக்களின் வழிகாட்டியாக, தலைவனாக இருக்க முடியும். கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்து இருக்கலாமே. ஒரு அறிக்கையாவது தந்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.
நாட்டில் ஜனநாயகமே இல்லை. கேடு கெட்ட பணநாயகம்தான் இருக்கிறது. இந்தியாவில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தமிழகத்தில் மட்டும் பேசுவது ஏன்?. 45 வருடம் நடித்துவிட்டேன். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தனக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு இன கூட்டத்துக்கு தலைவனாக வேண்டும் என்பது சந்தர்ப்பவாதம்தான்.
நாங்கள் சினிமாவில் இருந்துதான் வந்தோம். ஆனால் மக்களுக்காக போராடி சிறைக்கு சென்று பல தலைவர்களுடன் பழகி அரசியலுக்கு வந்தோம். என் இன வரலாறு தெரியாதவனுக்கு இங்கு என்ன வேலை. தமிழில் எத்தனை எழுத்துக்கள் இருக்கிறது. அதில் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை, எதையும் பார்க்காமல் ரஜினி சொல்ல முடியுமா?.
இவ்வாறு அவர் கூறினார்.
-athirvu.com
Thamizhan endru solladah Thalai nimirnthu selladah