தமிழ்நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகையான மது பாட்டில்களும் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ‘பீர்’ வகைகள் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது விற்பனை 31-ந்தேதியன்று பிற்பகலுக்கு பின்னர் களை கட்டத்தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்தபோதிலும் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி மற்றும் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.

31-ந்தேதியன்று மட்டும் ரூ.117 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று (1-ந்தேதி) மட்டும் ரூ.94 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ.175 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது. கடந்த ஆண்டை விட இந்த புத்தாண்டு விற்பனை ரூ.36 கோடி அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மதுக்கடைகளில் விற்பனையாகும் தொகையில் 50-க்கு 3 என்ற வீதத்தில் உரிமத்தொகை வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட டெண்டரை புறக்கணித்து வந்தனர். மேலும் தங்களுடைய கட்டிடத்தில் நடத்தப்படும் மதுக்கடைகளை பூட்டி சாவியை ஒப்படைக்கும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், மதுக்கடைகள் அருகே உள்ள உரிமத்தை புதுப்பிக்காத பார்களை மூடி சாவியை ஒப்படைக்கும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உரிமத்தை புதுப்பிக்காத பார்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பார்கள் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து உரிமத்தை புதுப்பிக்காத பார்கள் ‘சீல்’ வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கூறுகையில், “பார்களை அரசே மூடவேண்டும். கேரள மாநிலத்தில் பார்கள் ஏலம் அடிப்படையில் தனியாருக்கு விடப்படும். மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும் தொடர்பு இல்லாத வகையில் தனித்தனியாக இருக்கும். பார்களில் மதுவும் விற்பனை செய்ய அனுமதி உண்டு. இந்த நடைமுறையை தமிழகத்தில் பின்பற்றினால் பார் உரிமத்தை புதுப்பிப்பதில் எந்த நடைமுறை சிக்கலும் ஏற்படாது” என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

உரிமத்தை புதுப்பிக்காததால் தமிழகம் முழுவதும் பார்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தங்கமணி பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை (இன்று) சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைப்போம். அதில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக எங்களுடைய முடிவினை நாங்கள் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உரிமத்தை புதுப்பிக்காத பார்கள் சட்டவிரோதமாக திறந்திருக்கிறதா? என்பதை கண்காணிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: