தலித்துகளின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை

தலித் இளைஞர்கள் செய்த போராட்டத்தினால் மும்பை மாநகரமே செய்வாய்க்கிழமையன்று ஓரளவு ஸ்தம்பித்ததுபீமா கோரேகான்சண்டையின் 200வது ஆண்டை நினைவுக்கூர்வதற்காக புனே நகரில்நேற்று ஆயிரக்கணக்கான தலித்துகள் திரண்டபோது வெடித்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமுற்றனர்.

ஆதிக்க சாதியான பேஷ்வாவின் படைகள் பிரிட்டிஷ்காரர்களால் தோற்கடிக்கப்பட்டதை இந்நாளில் தலித் தலைவர்கள் நினைவுக்கூர்கின்றனர். ஏனெனில், பேஷ்வாவுக்கு எதிராக சண்டையிட்ட பிரிட்டிஷ் படையில் அப்போது தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட மஹர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கம் வகித்ததாக நம்பப்படுகிறது.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மும்பையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. மும்பையின் கிழக்குப் பகுதியிலுள்ள புறநகர் பகுதிகளை மும்பையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் கிழக்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பூரிலும், கிழக்கு மும்பையின் சில இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமையன்று புனேயில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பேத்கரின் பேரனும், தலித்துகள் உரிமைகளுக்காக போராடுகிறவருமான பிரகாஷ் அம்பேத்கர் நாளை மாநிலம் தழுப்பிய கடையடைப்பு நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திங்களன்று புனேயில் நடந்த போராட்டம் குறித்து ஒரு குற்றவியல் விசாரணைக்கு அம்மாநில முதல்வர் தேவேந்திரா ஃபட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலைமையை எண்ணி அச்சமடைய வேண்டாமென்றும், புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் மும்பை போலீசார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த விடயங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு முன்னர் அதை காவல்துறை அதிகாரிகளுடன் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: