சென்னை,
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 தமிழக மீனவர்கள் மற்றும் 159 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை சிறைகளில் இருந்து 79 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதற்கு உதவியதற்கு நன்றி. சில நாட்களுக்கு முன்பு அனைவரும் தமிழகத்தை வந்தடைந்தனர்.
இந்த நிலையில், 4-ந் தேதியன்று (நேற்று) இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 13 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சமீபகாலங்களில் 14 எந்திரப் படகுகளில் சென்று பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்த 84 மீனவர்கள் 8 நிகழ்வுகளில் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை உரிய பராமரிப்பு இல்லாமல் தொடர்ந்து பல்வேறு சீதோஷ்ண நிலையில் வைத்திருப்பதால் அவை பழுதடைந்து விடுகின்றன.
எனவே அவற்றை விடுவிக்கும்படி தொடர்ந்து தமிழக அரசு கோரியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவை ஒப்படைப்பது தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
எனவே இலங்கை, இந்தியா இடையேயுள்ள சர்வதேச கடல் எல்லை பிரச்சினை என்பதை முடிவுற்ற பிரச்சினையாக மத்திய அரசு எண்ணக் கூடாது.
எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் நீங்கள் இந்த பிரச்சினையை எடுத்துச்செல்ல வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 159 படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-dailythanthi.com