சென்னை: பல இடங்களில் நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் போக்குவரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகள் நிறுத்தம்
சென்னையில் பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், கோயம்பேடு உட்பட பல இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
நடுவழியில் நிறுத்தம்
இதனால் அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். நடுவழியில் பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள் பேருந்து ஓடாது என தெரிவித்து சென்றுவிட்டனர்.
மாணவ மாணவிகள் தவிப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். சலுகை கட்டண பஸ் பாஸில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்
கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும்
இதேபோல் கும்பகோணம், மதுரை, மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் செய்வதறியாமல் மக்கள் தவித்த வருகின்றனர்.