ரஜினியே வேண்டாங்கிறேன்…எங்க வீட்ட நாங்க பாத்துக்கிறோம் – சீமான்

சென்னை: ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் காப்பாற்ற மாட்டானா? பக்கத்து வீட்டுக்காரன், அண்டை வீட்டுக்காரன் தேவையில்லை என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அதே நேரத்தில் தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறி வரும் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தை காப்பாற்ற ரஜினி தேவையில்லை, நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினியை எதிர்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.

மண்டியிடக்கூடாது

தமிழ்நாட்டில் தமிழ்தாய் ஆட்சி நடக்கிறது. மற்ற இனத்தவர்களுக்கு தமிழ் இனம் மண்டியிடக்கூடாது. அப்படி மண்டியிட்டால் பெற்றோர் மேல் ஐயம், பிறப்பின் மேல் ஐயம் என்று கூறியுள்ளார் பாவலர் ஐயா.

போராடதவர்கள் ஆள்வதா

ஓடாத மானும், போராடாதவர்களும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போராடுபவர்கள் பைத்தியக்காரர்களா? கதிராமங்கலம், கூடங்குளம் போராட்டங்கள் பற்றி ரஜினியின் கருத்து என்ன? நிலைப்பாடு என்ன?

வகுப்பறை சரியாக இருக்கிறதா?

நாட்டில் சரியான வகுப்பறையில்லை. நிலவளம், மண்வளம் சரியில்லை. ஆறுகள், மலைகள், காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி சிந்திக்காமல் எப்படி ஆள முடியும்.

நான் சரிசெய்வேன்

என் வீட்டில் எது எங்கே சரியில்லை என்பது எனக்குத் தெரியும். அதை நாங்கள் சரி செய்வோம். ரஜினி விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கட்டும். வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக கட்ட எங்களுக்குத் தெரியும்.

ரஜினி வேண்டாம்

ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் பார்த்துக்கொள்வான். பக்கத்து வீட்டுக்காரனோ, அண்டை வீட்டுக்காரனோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. தத்துப்பிள்ளையாக கூட ரஜினியை ஏற்கத் தயாராக இல்லை. ரஜினியே வேண்டாங்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.

வெட்டி விட வருவதா?

தர்மத்தின் வழி நிற்பவர் எங்கள் தாய் நிலத்தை ஆள வரக்கூடாது. ஆன்மீக அரசியல் என்று கூறுகிறார் ரஜினி. போராடுபவர்கள் வேலையற்றவர்களா? ரஜினி வந்தால் நாடு நாசமாகிவிடும் மக்களும் நாசமாகிவிடுவார்கள் என்றும் எச்சரிக்கிறார் சீமான்.

tamil.oneindia.com

TAGS: