தமிழகம் முழுவதும் பேருந்துகள் வேலை நிறுத்தம் தீவிரம்- இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 % ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று சொன்ன அரசு பின்னர் 2.44% மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தையில் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய் வாஙக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காலை வேளையில் வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து எப்போதும் 110 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்று 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல் தாம்பரம் பேருந்து பணிமனையிலிருந்து தினமும் 133 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று 33 மட்டுமே இயக்கப்படுகிறது.

அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், பெரியகுளம் என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தற்போது அச்சத்தில் உள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கட்டண கொள்ளை இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: