சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு முதலே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று சென்னையில் நடைபெற்றது. ஆலோசனையில் பங்கேற்ற, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் அளித்த பேட்டி:
சம்பளம் போதாது என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் எனக் கூறுவது தொழிலாளர்களை அவமதிக்கும் செயல். தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களில் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.
தற்காலிக ஓட்டுநரால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம். எந்த வித நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் அடிபணியமாட்டோம். அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்மானத்திற்கு வரும்வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க, ஜன.8 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தொ.மு.ச., ஏ.ஐ.சி.டி.யூ., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.