நாட்டின் வளர்ச்சி வேகம் குறைந்ததற்கு மோடிதான் காரணம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,

நடப்பு நிதி ஆண்டில் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த், நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசை தனது டுவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியிருப்பதாவது:-

பிளவு அரசியலே காரணம்

13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் புதிய முதலீடுகள் குறைந்து போய்விட்டது. வங்கிகள் கடன் அளிக்கும் வளர்ச்சி கடந்த 63 வருடங்களில் இல்லாத வகையில் வெகுவாக குறைந்து போனது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

வேளாண் உற்பத்தியின் கூட்டு மதிப்பு 1.7 சதவீதத்துக்கு இறங்கி விட்டது. இது தவிர நிதிப் பற்றாக்குறை கடந்த 8 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்து உள்ளது. இதேபோல் அனைத்து திட்டங்களும் முடங்கிப் போய் உள்ளன. ஒட்டு மொத்தத்தில் இப்படி இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதற்கு பிரதமர் மோடியும், மேதாவியான நிதி மந்திரி அருண்ஜெட்லியும் இணைந்து நாட்டில் ஒட்டுமொத்த பிளவு அரசியலை ஏற்படுத்தியதுதான் காரணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புறக்கணித்தனர்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “இந்திய பொருளாதாரத்தை பேரழிவுக்கு உள்ளாக்கியதில் பண மதிப்பு நீக்கத்துக்கும், சரக்கு சேவை வரி விதிப்புக்கும் பெரும் பங்கு உண்டு. பிரதமர் மோடியும், நிதி மந்திரி அருண்ஜெட்லியும், பொருளாதார அறிவை புறக்கணித்ததுதான் இதற்கு முக்கிய காரணம்” என்றார்.

-dailythanthi.com

TAGS: