போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பது தான் சரியான நடவடிக்கை அரசுக்கு டாக்டர் ராமதாஸ் யோசனை

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் 4–வது நாளாக இன்றும் (நேற்று) இயக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப்பேசி சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த வி‌ஷயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் உள்ள நியாயங்களை உணராமல் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த சில துரதிர்ஷ்டவசமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த அணுகுமுறை போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துமே தவிர, தீர்வை ஏற்படுத்தாது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோருவது நியாயமான ஊதியமும், தங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பத்தர வேண்டும் என்பதும்தான். இந்தக் கோரிக்கை நியாயமற்றது என்று தமிழக அரசாலோ, ஐகோர்ட்டாலோ கூற முடியாது.

அவ்வாறு இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மிரட்டுவது முறையல்ல. மேலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறிவரும் நிலையில் இனியும் அவர்களுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறிவருவது முறையல்ல. பிரச்சினையை தீர்க்க இந்த அணுகுமுறை உதவவே உதவாது.

போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசுவதும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதும் தான் இன்றைய நிலையில் சரியான நடவடிக்கைகளாக அமையும். எனவே, தொழிலாளர்களை அழைத்துப்பேசி, அவர்களின் போராட்டத்திற்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-dailythanthi.com

TAGS: