சென்னை,
சம்பள உயர்வை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கும் இடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
22 தடவை நடந்த பேச்சு வார்த்தை தோல்வியைத் தழுவியதால் தமிழக அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள், கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டள்ளதால் தமிழகம் முழுவதும் 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக்கழகங்களில் சுமார் 18,400 பஸ்கள் உள்ளன. இதில் சில நூறு பஸ்களே இயக்கப்படுகின்றன. மற்ற அனைத்து
பஸ்களும் டெப்போக்களில் முடங்கிக் கிடக்கின்றன.
சம்பள உயர்வு பிரச்சினையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தங்கள் முடிவில் விடாப்பிடியாக உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக தமிழகம் முழுவதும் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை.
கடந்த இரு தினங்கள், விடுமுறை தினமாக இருந்ததால் பஸ் ஸ்டிரைக்கின் பாதிப்பில் இருந்து கணிசமான பொது மக்கள் தப்பியிருந்தனர். ஆனால் இன்று அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் அவர்கள் ரெயில் மற்றும் ஷேர் ஆட் டோக்களை நாட வேண்டிய திருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இன்று கடும் பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக நடுத்தரத் தரப்பு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சுமார் 1 மணி நேரம், 2 மணி நேரம் தாமதமாகவே அவர்கள் பணிக்கு செல்ல முடிந்தது.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து நீண்ட தூரத்துக்கு செல்பவர்களுக்கு உடனுக்குடன் பஸ் கிடைக்கவில்லை. வெளியூர்களில் இருந்து சென்னை வந்தவர்கள் பல ஊர்கள் வழியாக பஸ் மாறி, மாறி வரும் சூழல் உள்ளது. சென்னையிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பஸ்களில் மாறி, மாறி செல்ல வேண்டியுள்ளது.
சென்னையில் இன்று காலை ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சராசரியாக 200, 300 பேர் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று பயணம் செய்தனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் கேட்பதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் ரெயில் சேவையை நாடி னார்கள். ரெயில் சேவை தான் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுத்தது. குறித்த நேரத்துக்கு செல்ல வேண்டிய அனைத்துத் தரப்பினரும் இன்று காலை மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியதிருந்தது.
அனைத்துப் பேருந்துகளையும் வழக்கம் போல இயங்க செய்வதற்காக 8 போக்குவரத்து மண்டலங்களிலும் தற்காலிக ஊழியர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தற்காலிக ஊழியர்கள் இயக்கும் பஸ்களில் ஏறி பயணம் செய்ய பயணிகள் மத்தியில் ஒருவித பய உணர்வு ஏற்பட்டுள்ளது.
தற்காலிக ஊழியர்களால் ஆங்காங்கே விபத்து ஏற்பட்டதால் தமிழக அரசும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இன்று தற்காலிக ஊழியர்கள் மூலம் ஓரளவு பஸ்களை இயக்கி விடலாம் என்ற அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கிடையே பஸ் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பஸ் ஸ்டிரைக்கை சட்ட விரோதம் என்றது. பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை
நிறுத்தம் செய்து வரும் அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளனர். தங்களது சம்பள உயர்வு பிரச்சினையை சட்ட ரீதியாகவும் அணுக போவதாகவும் கூறி உள்ளனர்.
அரசு பஸ்கள் ஓடாததால் முக்கிய நகரங்களில் தனி யார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை பஸ்கள் பயணிகள் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் அந்த பஸ்களில் கட்ட ணம் அதிகமாக வசூலிக்கப் படுகிறது. இது நடுத்தர ஏழை பயணிகளிடம் கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதைத் தவிர்க்க,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அரசு தரப்பில் மீண்டும் இது தொடர்பாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.
அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் 5 நாட்களாக ஓடாததால் அரசுக்கு
வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் இதுவரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பணிக்கு திரும்பாத அரசு பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கவும் அரசு தீவிரமாகியுள்ளது. இதற்காக சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு அந்தந்த போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் போக்குவத்துக் கழக ஊழியர்கள் இதுவரை பதில் அனுப்பவில்லை.
மதுரையில் 4500 பேர், திருவண்ணாமலையில் 1700 பேர், கோவை மண்டலத்தில் 11,819 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
-dailythanthi.com