டெல்லி: குஜராத் எம்.எல்.ஏவும், தலித் ஆதரவு போராளியுமான ஜிக்னேஷ் மேவானி அழைப்புவிடுத்த, இளைஞர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி அவர் பேரணி நடத்த வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை தடுக்க சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பீமா கோரிகான் பகுதியில் சமீபத்தில் தலித்துகளுக்கும், மராத்தியர்களுக்கும் நடுவே ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக பீம் ஆர்மி நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்ய வேண்டும், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு பிரச்சினை, பாலின சமத்துவ உரிமை ஆகியவற்றை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, “சமூக நீதி பேரணி” என்ற பெயரில் டெல்லி, நாடாளுமன்ற தெருவில் இன்று பேரணி நடத்த மேவானி இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி பேரணி நடத்த ஜிக்னேஷ் மேவானி வருகை தந்துள்ளார். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக நிருபர்களிடம் பேசிய மேவானி, 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, இந்து-முஸ்லிம், தலித்துகள்-பிற ஜாதியினர் நடுவே பிளவை ஏற்படுத்தி வாக்குகளை பாஜகவுக்கு திருப்ப ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும், பீமா கோரிகான் கலவரத்திற்கும் ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். மக்கள் பிரதிநிதியான தன்னை பேச அனுமதிக்காமல் போலீசார் தடுப்பதாகவும் அவர் கூறினார்.