மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் பேருந்துகளை இயக்குவோம்: தொழிற்சங்கங்கள்

ஜனவரி 4ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் தொழிற்சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக இருந்தால் 2.44 மடங்கு ஊதிய உயர்வு என்பதை இடைக்காலமாக ஏற்பதாக தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும், தற்போது 2.57 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டுமென்றும், 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக அளிக்க வேண்டுமென்றும் கோரி 7வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் பெருமளவில் ஓடவில்லை. பணிக்கு வரும் சில பணியாளர்களை வைத்தும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டு, குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஓய்வூதியப் பலன்களை அளிப்பதற்காக 750 கோடி ரூபாய் இன்று தமிழக அரசு அளித்திருப்பதாக கூறினார்.

ஆனால், இந்த வாதத்திற்கு தொழிற்சங்கங்கங்களின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஊதிய உயர்வு தொடர்பாக அரசு இறங்கிவரவில்லையென்றும் அங்கீகாரம் இல்லாத சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, 2.44 சதவீத ஊதிய உயர்வு என்பதை இடைக்காலமாக ஏற்றுக்கொண்டு, பணிக்குத் திரும்ப முடியுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதையடுத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த அவர்கள் தரப்பு வழக்கறிஞர், மீண்டும் நீதிமன்றத்தை அணுகி இதனை இடைக்காலமாக ஏற்பதாகவும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்றும் கோரினர். மேலும், அங்கீகாரம் பெறாத 32 சங்கங்களுடன் கடந்த ஜனவரி 4ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பும் தொழிற்சங்கங்களும் புதிதாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு (வியாழன்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று காலையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 750 கோடி ரூபாய் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும். இந்த வாக்குறுதியை ஏற்று போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்” என்று கூறினார். -BBC_Tamil

TAGS: