உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்தத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இதை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

உயிரிழப்பை ஏற்படுத்தும் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் என பல சமூக நல அமைப்புகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து கள்ளச்சாராயம் தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தை திருத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு முடிவு செய்து அதற்கான சட்ட திருத்தத்தை கடந்த மாதம் உருவாக்கியது.

இதன்படி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சினால் ரூ. 10 இலட்சம் அபராதம், ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டதிருத்தத்துக்கு உத்தரப்பிரதேச சட்டமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து இந்த மசோதா ஆளுநர் ராம் நாயக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதை தொடா்ந்து இன்று இந்த சட்டதிருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது.

-4tamilmedia.com

TAGS: