போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பும் ஊழியர் தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் வியாழக்கிழமை இரவு முடித்துக்கொண்டனர்.
ஓய்வூதிய நிலுவையை உடனடியாக அளிக்க வேண்டும், 2.57 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் எட்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வந்துகொண்டிருக்கும் பணியாளர்களை வைத்தும், தற்காலிக ஒட்டுனர்களை வைத்தும் பேருந்துகள் மிக குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
இந்த நிலையில்,இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மணிக்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு வழங்க முன்வந்திருக்கும் 2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென நீதிமன்றம் நேற்று கூறியிருந்த நிலையில், அது குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
அப்போது பதிலளித்த தொழிற்சங்க தரப்பு வழக்கறிஞர், ஊழியர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும், ஒரு மத்தியஸ்தரை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஊழியர் தரப்பு முன்வைத்தது.
இது குறித்து அரசுத் தரப்பின் கருத்தைப் பெற ஏதுவாக வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மீண்டும் விசாரணை துவங்கியபோது, மத்தியஸ்தர் நியமனத்திற்கு ஒப்புக்கொண்ட அரசுத் தரப்பு, பிற கோரிக்கைகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்தது.
இதையடுத்து மத்தியஸ்தராக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் நடந்தது. முடிவில் முன்னாள் நீதிபதி பத்மனாபனை பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் எடுக்க வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
இதனிடையே தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு உள்ளிட்ட வேலை நிறுத்தம் நடத்திய சங்கங்களின் தலைவர்கள் கூடிப்பேசி மத்தியஸ்தர் நியமித்திருப்பதை ஏற்று வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக வியாழக்கிழமை இரவு அறிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை முதல் பேருந்துகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil