நீதிபதிகள் போர்க்கொடி: உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் காக்குமா, மாய்க்குமா?

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற செய்தியாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் பிபிசி தமிழிடம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அரசியல் மற்றும் நிதித்துறை சம்பந்தப்பட்ட முக்கிய வழக்குகளை தலைமை நீதிபதி மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வழக்கம். .

ஆனால், தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் பல முக்கியமான வழங்குக்களை ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்குகிறார். எங்கள் 4 பேரையும் புறக்கணிக்கிறார் என்புது இந்த நீதிபதிகளின் முக்கியமான குற்றச்சாட்டு என்று அவர் விளக்கினார்.

இரண்டாவது நிலையில் இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், மூன்றாம் நிலை ரஞ்சன் கோகாய், நான்காம் நிலை மதன் லோகூர் மற்றும் ஐந்தாம் நிலையில் இருக்கும் குரியன் ஜோசஃப் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை வைத்திருப்பதாக அவர் கூறினார். .

மேலும், அரசியல் சாசன அமர்வில் முக்கியமானவர்கள் மூத்த நீதிபதிகளாக இருப்பார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தலைமை நீதிபதி அமர்வுக்காக 6 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.

அதில்; கன்வில்கர், சந்திர சூட், அசோக்பூஷன் ஆகிய 3 பேரும் ஜூனியர் நீதிபதிகள். சிக்ரி 6வது நபர். தலைமை நீதிபதி மிஸ்ரா முதலாவது நபராக இருந்தார்.

எனவே, அரசியல் சாசன விசாரணைகளில் கூட மூத்த நீதிபதிகளை புறக்கணிப்பதாகவும், முக்கியமான வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளிடம் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீதிபதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் 2 பொதுநல வழக்குகள் வந்தன. இந்த 2 வழக்குகளும் ஆர்.கே.அகர்வாலிடம் அனுப்பப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.

எனவே, அரசுக்கு சாதகமாக நீதித்துறை செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் தங்களுக்கு வந்துள்ளது என்று அவர்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளனர் என்று வெங்கடேசன் தெரிவித்தார்.

எமர்ஜென்சி காலத்தில்தான் நீதித்துறை தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தது மாதிரி இருந்தது. அதுபோன்ற ஒரு சூழ்நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது அதுதனால்தான் பத்திரிகையாளர்கள் மூலமாக நாங்கள் இதனை தெரியப்படுத்துகிறோம் என்று இந்த 4 நீதிபதிகளும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

மூத்த நீதிபதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று இந்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியிருப்பதால், இது தொடர்பாக ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா என்று கேட்டபோது, உச்ச நீதிமன்ற விதிகள் உள்ளன என்றும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் “மாஸ்டர் ஆப் த ரோஸ்டர்” என்று சொல்லுவார்கள். எந்த வழக்கை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதில் யாரும் தலையிட முடியாது என்று பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூட தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், அரசியல் சாசனத்துக்கு விளக்கம் கூறுவது போன்று இருக்கும்போது, உச்ச நீதிமன்ற விதிமுறைகள்படி மூத்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்ற விதிகளுக்கும், வழிமுறைகளுக்கு எதிராக இதனை செய்கிறீர்கள் என்று இந்த 4 நீதிபதிகளிள் தெரிவித்துள்ளனர். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். வாய்ப்பு கொடுத்தும் நீங்கள் திருந்தவில்லை. தொடர்ந்து இந்த நிலை நீடிக்கக்கூடாது.

அதனால், உடனடியாக தலைமை நீதிபதி தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு, முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் எங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு, முடிவெடுங்கள். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று இந்த 4 நீதிபதிகளும் தெரிவித்திருப்பதாக வெங்கடேசன் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு நடத்தியது இதுதான் முதல்முறை என்று கூறப்பட்டாலும், முன்பு இது மாதிரி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டபோது. “ஓரிரு முரண்பாடுகள் வரும். ஆனால், நேரடியாக பத்திரிகையாளாகளை சந்தித்து, தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திரப்பது நீதித்துறை வரலாற்றில் இதுதான் முதல்முறை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயரை குறிப்பிட்டு நான்கு நீதிபதிகள் குரல் எழுப்பியுள்ளதும் இதுவே முதல்முறை.

ஒரு நீதிபதிக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். அவர் தனிப்பட்ட முறையில் அதற்கு விளக்கங்கள் அளிக்கலாம். நான்கு நீதிபதிகள் ஒன்றாக சேர்ந்து தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியுள்ளது இதுதான் முதல்முறை,” என்றார் அவர்.

நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கு பிறகு சட்ட ரீதியான என்னென்ன சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன என்று கேட்டபோது. ஆதார் அட்டை சம்மந்தமாக, இந்த ஆதார் சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா, இது செல்லுமா செல்லாதா என்று 17ம் தேதி அரசியல் சாசன அமர்விடம் விசாரணை வரவுள்ளது.

அந்த அமர்வில், தலைமை நீதிபதியை தவிர்த்து, மூத்த நீதிபதிகள் யாரும் இல்லை. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு மூத்த நீதிபதிகளை நியமித்து மாற்றங்களை ஏற்படுத்தினால், இவர்கள் கொஞ்சம் சமாதானம் ஆவார்கள் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

இதில் அரசு தலையிட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது. இதில் அரசு தலையிட முடியாது என்றும். இது முற்றிலும் நிர்வாக முடிவு. நிர்வாகத் தீர்மானங்களில் தலைமை நீதிபதியிடம்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.

ஒரு பிரதமரிடம் அவர் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நீதித்துறை சொல்ல முடியுமா? அதுபோல, நீதித்துறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது.

நியமித்தவர் என்ற முறையில், குடியாரசுத் தலைவர் இதில் தலையிட முடியுமா என்று கேட்டபோது, அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்யலாம். குடியரசுத் தலைவர்தான் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பவர்.

குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நீங்கள் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை களைந்து, சர்ச்சைகளுக்கு தீர்வு கண்டு, மூத்த நீதிபதிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யுங்கள் என்று பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவ்வாறு செய்வது கட்டாயமல்ல. இது குடியரசு தலைவரை சார்ந்தது என்று வெங்கடேசன் கூறினார். .

இந்த குற்றச்சாட்டு நீதிமன்ற மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்துமா அல்லது நீதிமன்ற செயல்முறைகளில் ஜனநாயக முறைகளை நிலைநாட்ட உதவுமா என்றதற்கு, ஜனநாயகத்தின் மரபுகளை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் இதனுடைய நோக்கம்.

எமர்ஜென்சியின்போது, நீதித்துறை அதன் முதுகெலும்பை இழந்து விட்டது. ஆட்சியாளர்களின் போக்கில் நீதித்துறையும் சென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த 4 நீதிபதிகளின் ஐயப்பாடும் அதுதான். நீதித்துறை தன்னுடைய சுதந்திரத்தை இழந்துவிட்டது என்று மக்கள் அறிய வாயப்புள்ளது. .

நீதித்துறை தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படக்கூடாது.

சில வழக்குகளை தேவையான நீதிபதியிடம் அனுப்பி அவற்றை தள்ளுபடி செய்யலாம் என்று மக்கள் நம்ப வாய்ப்புள்ளது என்றால் இது அரசாங்க சொல்படிதான் தலைமை நீதிபதி செயல்படுகிறார் என்று எடுத்துகொள்ள வாய்ப்பிருக்கும். அதற்கு ஏன் இடம்கொடுக்கிறீங்க என்று இந்த நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக வெங்கடேசன் தெரிவித்தார்.

இது மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா? என்ற கேள்விக்கு,

தலைமை நீதிபதி செய்வதை தட்டிக்கேட்காத முதுகெலும்பு இல்லாத நிலை ஆகிவிட்டதாக மக்கள் எங்கள் மீது எந்த குற்றத்தையும் சொல்லக்கூடாது என்றுதான் இதனை வெளியே கொண்டு வருகிறோம் என்று இந்த 4 நீதிபதிகளு விளக்கம் அளித்துள்ளதாக வெங்கடேசன் குறிப்பிட்டார். -BBC_Tamil

TAGS: