காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்!

எந்தக் காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு நடிகரும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை கேட்டுக் கொண்டுள்ள அம்பரீஷ், இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கம் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியிலிருந்து தமிழகத்தின் பங்கு நீரை தரக் கோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் இப்போதைய நிலவரப்படி கர்நாடகா தமிழகத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இங்கு விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால் அதில் 7 டி.எம்.சி தண்ணீரையாவது காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடகா, காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com

TAGS: