ஆந்திரா: பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை

பெண்கள் கடத்தலை தடுக்கும்விதமாக, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் தண்டனை அளிக்க ஆந்திர அரசு தயாராகிவருகிறது. மனித கடத்தலை தடுக்கவும், பொருத்தமான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தவும் ஒரு ஆலோசனை குழவை அமைக்க ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்கும்.

இளம் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பிரச்சனை ஆந்திராவில் அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால், இந்த பிரச்சனையின் தீவிரம் குறையலாம். ஆந்திர அரசும் இதையே எண்ணுகிறது.

பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் திருத்தங்களை முன்மொழியும் முதல் மாநிலம் ஆந்திரா என்று பெண் கடத்தலைத் தடுக்க இயங்கிவரும் பிரஜ்வாலாவின் இணை நிறுவனர் சுனிதா கிருஷ்ணன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மற்ற எந்த மாநிலங்களும் இதுபோன்ற சட்ட நடவடிக்கையைக் கொண்டுவர முயற்சித்ததில்லை என்றும், ஆந்திரா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

”தேவை மற்றும் பெறுதலை பொறுத்தே மனித கடத்தல் உள்ளது. பாலியல் தொழிலாளர்களிடம் செல்லுபவர்களுக்கு உடனடி தண்டனை கிடைத்தால், மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அதிகரிக்கும். பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க இது வழிவகுக்கும்.” என்கிறார் சுனிதா கிருஷ்ணன்

தற்போதைய சட்ட நடைமுறை குறித்து அவரிடம் கேட்டபோது, அது மிகவும் பலவீனமாக உள்ளது என அவர் கூறுகிறார். ”சட்டவிரோத கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்படலாம். ஆனால், இதுபோன்ற வழக்குகள் மிகவும் குறைவு. அவர்கள் கைது செய்யப்பட்டாலும், தண்டனைப் பெறுவதற்கான சாத்தியங்கள் மிக குறைவு. பல வழக்குகள் பெண்கள் சிக்கிக்கொள்கின்றனர் ஆனால், பாலியல் தொழிலாளர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் தப்பித்துக்கொள்கின்றனர் ” எனவும் அவர் கூறுகிறார்.

மனித கடத்தலை தடுப்பது, மீட்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு அளிப்பது, குற்றவாளிகளை விரைவாகத் தண்டிப்பது என போன்றவை இந்தப் பிரச்சனையை தீர்க்க மேலும் உதவும் என சுனிதா கருதுகிறார்.

மனித கடத்தலை தடுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சட்ட நடைமுறைகளை ஆந்திரா அரசு அமைத்த குழு ஆய்வு செய்து, ஆந்திராவுக்கு ஏற்ற திட்டத்தை வடிவமைக்கும். இறுதி அறிக்கையைப் பார்த்த பின்னர் அரசு முடிவெடுக்கும். -BBC_Tamil

TAGS: