4 கோடி மக்கள் பங்கேற்ற, மனிதச் சங்கிலி.. எதற்காகத் தெரியுமா..?

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வரதட்சனைக்கு எதிரான தீவிர பிரசார இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது கட்சியினர் மற்றும் தலைவர்கள் இல்ல திருமணங்களில் வரதட்சனையை தவிர்க்குமாறு வலியுறுத்தியும் வருகிறார்.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நண்பகல் சரியாக 12 மணிக்கு வரதட்சனை, குழந்தை திருமணம் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு எதிராக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, சட்டசபை சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி, மாநில மந்திரிகள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல லட்சக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

காந்தி மைதானத்தில் தொடங்கிய மனித சங்கிலி அனைத்து மாவட்டங்களின் வழியாக சுமார் 14 ஆயிரம் கிலோமீட்டர் நீளம்கொண்ட பிரதான சாலைகளில் சங்கிலி தொடராக தொடர்ந்தது. இந்த கூட்டத்தில் பல பகுதிகளில் உள்ள புத்த பிக்சுகளும் பங்கேற்றனர்.

யாருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் உரிய குடிநீர் மற்றும் மருத்துவ முதலுதவி வாகன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்த இந்த பேரணியில் நான்கு கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றதாக பிரபல செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

-athirvu.com

TAGS: