12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: வருகிறது புதிய சட்டம்..

அரியான மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது. அரியானா கற்பழிப்பு சம்பவம் பற்றி பிரதமர் மோடி, ‘மான் கீ பாத்’ உரையில் பேசுவாரா? என்று விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் அரியானாவில் கொண்டு வரப்படுகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் இது தொடர்பாக பேசியதாவது:-

அரியானாவில் சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் கவலை அளிக்கின்றது. இது போன்ற சம்பவங்களில் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான பாலியல் புகார்களில் 25 சதவீதம் பொய்யாவை. இது போன்ற புகார்களில் அவற்றின் உண்மைதன்மையை உறுதி செய்யாமல் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

75 சதவீத கற்பழிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், பக்கத்து வீட்டினர், ஏற்கனவே பழக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை மட்டுமின்றி சமூகத்துக்கும் பொறுப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த வாரம் மட்டும் அரியானாவில் 9 கற்பழிப்பு வழக்கு பதிவாகி உள்ளது.

-athirvu.com

TAGS: