மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு புரட்சியாவதை தடுக்க கண்துடைப்பு கட்டண குறைப்பை அறிவித்த அரசு!

சென்னை: மாணவர்கள் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் என்கிற நிலையில் கண்துடைப்புக்காக அரசு பேருந்து கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

அரசு பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வால் தமிழக மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் தங்களது படிப்பே பாழாகும் என அச்சப்பட்டனர்.

வகுப்பு புறக்கணிப்புகள்

இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்தனர். இந்தப் போராட்டம் தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் வெடித்தது.

வேலைக்கு போகும் சூழல்

ஒவ்வொரு மாணவரும் மாணவியரும் தங்களது குடும்ப சூழ்நிலையை விளக்கி எங்களால் இனி படிக்க வரவே முடியாத துயரத்துக்கு தள்ளப்படுகிறோமே என குமுறினர். வேலைக்கு செல்ல பஸ் ஏறி படிக்க வந்தோம்; இனி பஸ்ஸில் ஏறவே வேலைக்கு செல்ல வேண்டியதிருக்குமே என கொந்தளித்தனர்.

ஜல்லிக்கட்டு புரட்சி போல

இப்போராட்டம் நாளை திங்கள்கிழமை முதல் தீவிரமடையும் என மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இப்படி மாணவர்கள் போராட்டம் தீவிரமானால் ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல ஒட்டுமொத்த தமிழகத்தின் கிளர்ச்சியாக வெடித்துவிடும் என்பது அரசின் அச்சம்.

மாணவர்கள் நிராகரிப்பு

அதனால் பல மடங்கு ரூபாய் கட்டண உயர்வை அறிவித்துவிட்டு பைசாக்கள் கணக்கில் குறைக்கிறோம் என்கிற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது அரசு. மாணவர்கள் புரட்சி தொடரக் கூடாது என்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நிச்சயம் பயனளிக்காது என்றே கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: