நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய வழி.. இந்திய பெண் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு..

உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சுமார் 5 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதற்கு நாம் சாப்பிடும் உணவு பொருள்தான் முக்கிய காரணமாக உள்ளது.

இந்த நிலையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய ரக கோதுமையை ரெஜினா அகமது என்ற பெண் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இவர், கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்தவர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருந்து வருகிறார்.

இவரது தலைமையிலான குழுவினர் இந்த புதிய ரக கோதுமையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதை சாப்பிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் குடல் புற்று நோய் ஆகியவை கட்டுப்படுத்தப்படும் என்று ரெஜினா தெரிவித்தார்.

நாங்கள் கண்டுபிடித்துள்ள கோதுமையில் அதிக அளவிலான அமிலோஸ் மற்றும் பைபர் ஆகியவை உள்ளன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கோதுமையை விட 10 மடங்கு அமிலோஸ் இதில இருக்கிறது.

இந்த கோதுமையில் உள்ள மாவு பொருள் அதிக ஜீரண சக்தி உடையது. இதன் காரணமாக மரபணு பாதிப்புகளை தடுத்து குடல் புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு பொருள் சிறுகுடலில் சென்று அங்கு ஜீரணிக்க தொடங்கும். ஆனால், இந்த கோதுமை பெருங்குடலுக்கு சென்றதுமே உணவில் சிதைவு ஏற்பட்டு ரத்தத்துக்கு செல்லும் குளுக்கோசின் வேகத்தை குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.

நமது உணவு பழக்க வழக்கங்களின் மாற்றம் காரணமாக டைப்-2 நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது, உலக சுகாதாரத்துக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பல நாடுகள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் இந்த பாதிப்பை அதிகம் சந்தித்துள்ளன.

நீரிழிவு நோயினால் பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்படுவது மட்டும் அல்லாமல் பெரும் செலவும் ஏற்படுகிறது. இப்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள கோதுமை இதை தடுக்க உதவியாக இருக்கும். இது ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

கோதுமை உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோதுமை பெரும்பாலும் உள்நாட்டிலேயே உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

கோதுமையில் ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் இருக்கும் போது, அவை நுகர்வோரின் உடல் சுகாதாரத்துக்கு சிறப்பான பயன்பாடாக அமையும்.

இவ்வாறு ரெஜினா அகமது கூறினார்.

-athirvu.com

TAGS: