தேவையற்றவர்களாக கருதப்படும் 2.1 கோடி இந்தியப் பெண்கள்

ஓர் ஆண் குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தால் இந்தியாவில் ‘தேவைப்படாத’ குழந்தைகளாக 2.1 கோடி பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

கருவின் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது போலில்லாமல் இந்த வடிவத்தில் ஆண் குழந்தைக்கான விருப்பம் நுட்பமாக வெளிப்படுவதாக நிதி அமைச்சகம் தயாரித்த இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் போக்குகளால் பெண்குழந்தைகளுக்கு குறைவான வளங்களே கிடைக்கும் என ஆய்வறிக்கையை எழுதியவர்கள் எச்சரிக்கையும் வைத்துள்ளனர்.

மகன் தான் வேண்டும் என்ற பார்வை, இந்திய சமூகத்தின் எண்ணம் இந்திய சமூகம் சுய பரிசீலனை செய்துகொள்ளவேண்டிய ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எந்தப் பாலினத்தை சேர்ந்த குழந்தை என்பதை சோதனை செய்து பார்த்து கருகலைப்பு செய்யப்பட்டதாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிக கவனிப்பு அளிக்கப்பட்டதாலும், 63 மில்லியன் பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால், இந்தியாவில் இது தொடர்ந்து நடக்கிறது. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட கருக்கலைப்பும் நடக்கிறது.

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கான கலாச்சார ரீதியான காரணங்கள்:

  • சொத்து மகனுக்கு செல்லவேண்டும், மகளுக்கு அல்ல.
  • மகளை திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை அளிக்க வேண்டும்.
  • திருமணத்துக்குப் பிறகு, பெண்கள் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

ஆண் குழந்தைகள் பிறப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு நாளிதழ் அறிவியல் அடிப்படை இல்லாத ஆலோசனைகள் அடங்கிய பட்டியலை வெளியிடும் அளவிற்கு இந்த பிரச்சினை சென்றுள்ளது. ஒரு வாரத்தில், குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்ளுதல், தூங்கும்போது மேற்கு நோக்கி படுத்து தூங்குவது போன்றவை அந்த ஆலோசனைகளில் ஒன்று.

ஆண் குழந்தைதான் தேவை என்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா. மிகக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேகாலயா.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஏழு வயதுக்குக் குறைவாக உள்ள 1,000 பெண்களுக்கு, இணையாக 1,200 ஆண்கள் உள்ளனர் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: