வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி,

இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் காலித் முண்டப்பில்லி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு மனு செய்தார்.

2016-ம் ஆண்டு, நவம்பர் 22-ந் தேதி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு சட்டப்படி 30 நாளில் பதில் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.

இதையடுத்து காலித், கடந்த ஆண்டு, ஜனவரி 9-ந் தேதி தகவல் உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மனு, வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் அங்கிருந்தும் பதில் வரவில்லை.

இதையடுத்து விசாரணையின்போது, பதில் அனுப்ப தாமதம் ஆனதற்கு கெட்ட நோக்கம் காரணம் அல்ல என கூறிய பிரதமர் அலுவலகம் சம்மந்தப்பட்ட பிரிவை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி மன்னிப்பு கேட்டது. இதனால் பிரதமர் அலுவலகம், அபராதத்தில் இருந்து தப்பியது.

முடிவில், காலித் கேட்ட தகவலை, தகவல் ஆணையத்தின் உத்தரவு கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மத்திய நிதித்துறை அமைச்சகம் வழங்க வேண்டும் என முதன்மை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் உத்தரவிட்டார்.

-dailythanthi.com

TAGS: