ஒரே தேசம்.. ஒரே மொழி; ஒரே வரி.. ஒரே தேர்வு.. இப்ப ஒரே தேர்தல்!

டெல்லி: மத்திய பாஜக ஆட்சியில் கோஷங்களுக்கு எந்த குறைவும் இல்லை.. ஒரே தேசம் ஒரே மொழி; ஒரே தேசம் ஒரே வரி; ஒரே தேசம் ஒரே தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்கிற புதிய முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே இந்துத்துவா கொள்கைகளை சகட்டுமேனிக்கு திணிக்க தொடங்கியது. ஒரே தேசம்.. ஒரே மொழி என்கிற முழக்கத்துடன் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்பட்டது. இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பாடாய்பட்டது பாஜக.

ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள் இதைக் கடுமையாக எதிர்த்தன. இதுவரை அமைதி காத்த மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிஷா மாநிலங்கள் கூட இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ந்தன. கர்நாடகாவில் இந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாசமானது தொழில்துறை

இதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய கையோடு ஒரே தேசம் ஒரே வரி என்கிற முழக்கத்தை முன்வைத்து ஜிஎஸ்டியை திணித்தது பாஜக அரசு. இதனால் மக்கள் விழிபிதுங்கிப் போயினர். நாட்டின் சிறு, குறு தொழில்கள் காணாமல் போகும் அவலம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.

சூரத்தில் எழுச்சி

குறிப்பாக குஜராத்தின் சூரத்தில் வரலாறு காணாத கிளர்ச்சியில் வர்த்தகர்கள் ஈடுபட்டனர். அங்கு வைரம் பட்டை தீட்டும் தொழிலும் ஜவுளி தொழிலும் நாசமாகப் போகும் என்கிற பேரச்சம் ஏற்பட்டது.

அனிதாக்களை காவு கொண்டது

அடுத்ததாக ஒரே தேசம்… ஒரே தேர்வு என்கிற அட்டூழிய முழக்கத்தை முன்வைத்து நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இதனால் கிராமப்புற மாணவர்களின் மருத்து கனவு பறிபோனது. அரியலூர் அனிதாக்களை காவு வாங்கியதுதான் மிச்சம்.

எங்கும் காவி கொடி

இதைத் தொடர்ந்து ஒரே தேசம்.. ஒரே கட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தது பாஜக. காலூன்ற முடியாத மாநிலங்களில் ஆளும் கட்சியில் இருந்து ஆள் பிடித்து ‘வாடகை அரசியல்’ மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றி, இதோ இத்தனை மாநிலங்களில் எங்கள் காவி கொடியே பறக்கிறது என மார்தட்டியது பாஜக.

சாத்தியமற்ற முழக்கம்

இப்போது அடுத்ததாக ஒரே தேசம் ஒரே தேர்தல் என்கிற நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத ஒரு முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக. நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு ஒரே நேரத்தில் லோக்சபாவுடன் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது விபரீதமானது.

ஜனாதிபதி ஆட்சியேதானா?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டுவது போல், ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்கிறது… அப்படியானால் அடுத்த லோக்சபா தேர்தல் வரும் வரை அங்கு என்ன ஜனாதிபதியே ஆட்சியே 4 ஆண்டுகாலத்துக்கு நடக்கும்? தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்த முழக்கமே ஏமாற்றானது என்பதுதான் சரியான வாதம். ஒருவேளை அரசியல் சாசனத்தையே திருத்தி எழுதக் கூடிய விபரீதங்களுக்கு பாஜக வித்திடுகிறதோ என்கிற சந்தேகத்தையும் இந்த முழக்கம் எழுப்புகிறது.

பொதுமக்கள் விரக்தி

மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை; மாநிலங்களின் உரிமை குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை. தமது அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத முழக்கங்களை முன்வைப்பதில் பாஜகவை மிஞ்ச முடியாது என்பதுதான் பொதுமக்களின் விரக்தியாக இருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: