ராமர் சேது பாலம் 18,400 ஆண்டுக்கு முன் உருவானது – ஆய்வில் தகவல்..

‘ஆடம்ஸ் பாலம்’ எனப்படும் ராமர் சேது பாலம் தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 35 கி.மீ. நீளம் அமைந்துள்ளது. கடலில் ஆழமற்ற மற்றும் மணல் திட்டு பகுதியிலும் உருவாகியுள்ளது. தண்ணீருக்குள் 100 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த பாலம் குறித்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதற்காக ராமேஸ்வரம் மன்னார் வளைகுடாவின் மைய பகுதியில் 3 இடங்களில் ஆழ்துளையிட்டு மண் மற்றும் பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இவை எடுக்கப்பட்டன. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆடம்ஸ் பாலம் எனப்படும் ராமர் சேதுபாலம் 18,400 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலம் ‘சிபிசைட்ஸ் மார்கரிடிபெரெஸ்’ எனப்படும் நுண்படிமங்களால் உருவாகியுள்ளன. இவை கடல்வண்டல் படிமங்களால் ஏற்படுகின்றன. ‘சிபிசைட்ஸ் மார்கரி டிபெரெஸ்’ நுண் படிவங்களின் வயது விவரம் ‘கார்பன்-14’ என்ற முறை மூலம் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது.

அதன்மூலம் ராமர் சேது பாலம் 18,400 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வு மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழக கடல் மேலாண்மை நிறுவன பேராசிரியர் ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.

மேலும் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பம் மற்றும் சுனாமி அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியா, தாய்லாந்து. இலங்கை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டது போன்ற சுனாமி தாக்குதல் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நடைபெறவில்லை.

இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற சுனாமி தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் கல்பனா, ராஜேஸ்வரராவ், சென்னை பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறை நிபுணர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஈடுபட்டனர்.

-athirvu.com

TAGS: